மாற்றுத்திறனாளிகள் குறித்து பிற்போக்குத் தனமாக கருத்து தெரிவித்த வழக்கில் கைதான மகாவிஷ்ணுவின் நீதிமன்றக் காவலை மேலும் 14 நாட்கள் நீட்டித்து இன்று (செப்டம்பர் 20) உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டை அரசுப் பள்ளிகளில் கடந்த மாதம் நடைபெற்ற தன்னம்பிக்கை வகுப்பில் பங்கேற்று பேசிய மகா விஷ்ணு மாற்றுத்திறனாளிகள் குறித்து பிற்போக்குத்தனமாக மாணவிகள் மத்தியில் பேசினார்.
இதுகுறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையானது. மகாவிஷ்ணு மீது மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் அளித்த புகாரின் பேரில் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய அவரை சென்னை விமான நிலையத்திலேயே போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து மகாவிஷ்ணுவை 3 நாட்கள் காவலில் எடுத்து சென்னை சைதாப்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது திருப்பூரில் உள்ள அவரது பரம்பொருள் அறக்கட்டளைக்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து போலீஸ் காவல் முடிந்து கடந்த 14ஆம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகாவிஷ்ணு மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு 20ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி சுப்பிரமணி உத்தரவிட்டார்.
அதன்படி இன்றுடன் அவரது நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், புழல் சிறையில் இருந்தபடியே காணொலி மூலம் மகாவிஷ்ணு ஆஜரானார்.
அப்போது அக்டோபர் 4ம் தேதி வரை என மேலும் 14 நாட்களுக்கு காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
நாயுடு Vs ஜெகன்மோகன்: அரசியல் குண்டாக மாறிய திருப்பதி லட்டு!
லட்டு… சைவமா? அசைவமா? அப்டேட் குமாரு