உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை விமர்சித்து பேசியதாக கைது செய்யப்பட்ட பத்ரி சேஷாத்ரிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக புத்தகபதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி அளித்த பேட்டியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை விமர்சித்து பேசியிருந்தார்.
இந்த நிலையில் கடந்த ஜூலை 27 ஆம் தேதி வழக்கறிஞர் ப.கவியரசு பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல் நிலையத்தில் பத்ரி சேஷாத்ரி மீது புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரில், “இரு தரப்பு மக்களிடையே அமைதியை குலைக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் விதத்திலும் பத்ரி சேஷாத்ரி பேசியுள்ளார்.
மேலும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை ஏளனமாகவும், அவமதிக்கும் வகையிலும், அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசியிருந்தார். அவர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரின் பேரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த குன்னம் காவல் துறையினர் ஜூலை 29 ஆம் தேதி காலை பத்ரி சேஷாத்ரியை கைது செய்து பெரம்பலூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அங்கு, ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை பத்ரி சேஷாத்ரியை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் பத்ரி சேஷாத்ரி ஜாமீன் கோரி குன்னம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
பத்ரி சேஷாத்ரியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு குன்னம் போலீசாரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த இரண்டு மனுக்களும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில், “பத்ரி சேஷாத்ரியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டும். அதனால் அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது” என்று வாதிடப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதி கவிதா, பத்ரி சேஷாத்ரியை போலீஸ் கஸ்டடியில் எடுக்க முகாந்திரம் இல்லை.
அதற்கான தேவையும் இல்லை என கூறி காவல் துறையின் மனுவை தள்ளுபடி செய்து பத்ரி சேஷாத்ரிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
மோனிஷா
அழகர் கோவில் ஆடித்தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
கலைஞரின் நினைவு நாள்: ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி!
பொய் வழக்கு போனி ஆகாது..