பண்டிகைகளின்போது எது மாதிரியும் இல்லாத புது மாதிரி ஸ்வீட்டை பலரும் யோசிப்பார்கள். இந்த விநாயகர் சதுர்த்தி அன்று அப்படிப் புதுவிதமாக செய்ய உதவும் இந்த பாதாம் – தேங்காய் பர்ஃபி ரெசிப்பி. சுலபமாகச் செய்யக்கூடிய இந்த பர்ஃபி சுவையில் அசத்தும்.
என்ன தேவை?
பாதாம் பருப்பு – 100 கிராம்
தேங்காய்த்துருவல் – ஒரு கப்
பால் – அரை கப்
நாட்டுச் சர்க்கரை – 2 கப்
ஏலக்காய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
நெய் – 3 டேபிள்ஸ்பூன்
எப்படிச் செய்வது?
பாதாம் பருப்பை 20 நிமிடங்கள் கொதிக்கும் நீரில் ஊறவைத்து தோலுரித்து, பின் பால்விட்டு அரைக்கவும். பருப்பு அரைபட்டதும் தேங்காய்த்துருவல் சேர்த்து அரைக்கவும். கனமான கடாயில் நாட்டுச் சர்க்கரையை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டி சேர்த்துக் கொள்ளவும். அதில் அரைத்த பாதாம் – தேங்காய் விழுது மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து மிதமான சூட்டில் வைத்துக் கிளறவும். பாதாம் – தேங்காய் விழுது நாட்டு சர்க்கரையோடு கலந்து கெட்டியாக ஆரம்பிக்கும்போது ஏலக்காய்த்தூள் மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்விட்டுக் கிளறி கொண்டே இருக்கவும். கலவை கெட்டியாக ஒட்டாமல் வரும்போது மீதமுள்ள நெய்விட்டுக் கிளறவும். கைகளில் சிறிது கலவையை உருட்டிப் பார்த்தால் ஒட்டாமல் வரும் வரை கிளறி நெய் தடவிய ட்ரேயில் மாற்றிக் கொள்ளவும். 3 மணி நேரம் கழித்து விரும்பிய வடிவில் நறுக்கிக் கொள்ளவும்.