தமிழக அரசுத் துறைகளில் நிரப்பப்படாமல் உள்ள பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு (பின்னடைவு காலியிடங்கள் என்பது, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கான இடஒதுக் கீட்டில் தகுதியான நபர்கள் கிடைக்காவிட்டால் தொடர்ந்து காலியாக வைக்கப்பட்டிருக்கும் இடங்கள்) பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு டிஎன்பிஎஸ்சி மூலம் அதற்கான அறிவிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்” என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
2021-2022ம் ஆண்டுக்கான சட்டமன்ற கூட்டத் தொடரில் ஆளுநர் உரையில்,
’அரசுத் துறைகளில் காணப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்கள் சிறப்பு ஆள் சேர்ப்பு முகாம் மூலம் நிரப்பப்படும்’ என்று அறிவிக்கப்பட்டது.
அதற்குப் பின், கடந்த ஆண்டு ஜூலை 8ஆம் தேதி இதுதொடர்பாக, ஆதிதிராவிடர் நலத் துறையின் தொலைநோக்கு திட்டங்கள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.
இந்த நிலையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்கள் சிறப்பு ஆள் சேர்ப்பு முகாம் மூலம் நிரப்பப்படும்,
என்ற அறிவிப்பை செயல்படுத்த தலைமைச்செயலக துறைகளிடமிருந்து பிரிவு வாரியாக உறுதி செய்யப்பட்டு பெறப்பட்ட எண்ணிக்கையின் அடிப்படையில்,
ஆதிதிராவிடருக்கு 8,173 இடங்களும், பழங்குடியினருக்கு 2,229 இடங்களும் மொத்தம் 10,402 பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று அரசாணையை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி வெளியிட்டது.
இந்த பணியிடங்களை முகமைகள் மூலம் நிரப்ப கடந்த மே மாதம் அரசாணையும் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், “தமிழக அரசுத் துறைகளில் நிரப்பப்படாமல் உள்ள பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”
என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (அக்டோபர் 17) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
“தமிழக அரசுத் துறைகளில் நிரப்பப்படாமல் உள்ள பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்கள் சிறப்பு ஆள்தேர்வு மூலம் நிரப்பப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு ஓராண்டு ஆகியும் இதுவரை அந்த பணியிடங்கள் நிரப்பப்படாதது வருத்தமளிக்கிறது.
அரசுத் துறைகளில் பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் 10,402 பணியிடங்கள் பத்தாண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படவில்லை.
தேவையற்ற இந்த கால தாமதம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். பட்டியலின, பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காகத்தான் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
பின்னடைவு பணியிடங்கள் உரிய காலத்தில் நிரப்பப்பட்டிருந்தால்,10,402 குடும்பங்கள் வறுமையிலிருந்தும், சமூக பின்னடைவிலிருந்தும் மீண்டிருக்கும்.
அதை செய்யத் தவறியது சமூக அநீதி. பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கான 10,402 பின்னடைவு பணியிடங்களையும் உடனடியாக சிறப்பு ஆள்தேர்வு மூலம் நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டி.என்.பி.எஸ்.சி மூலம் அதற்கான அறிவிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்” என அதில் தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்
எடப்பாடி புறக்கணிப்பு: சபாநாயகர் விளக்கம்!
ஆ.ராசா மீது வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி!