தர்மபுரியில் பொம்மன் பெள்ளி பராமரித்து வந்த குட்டி யானை உடல்நலக்குறைவால் இன்று (மார்ச் 31) உயிரிழந்தது.
கடந்த மார்ச் 16 ஆம் தேதி தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வனப்பகுதியில், தாயைப் பிரிந்து கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
அந்த யானை குட்டியை முதுமலை புலிகள் காப்பகத்திற்குக் கொண்டு வந்து, கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் குட்டி யானையை பரிசோதித்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
தொடர்ந்து அந்த யானை குட்டியை, அதன் தாயுடன் சேர்க்க முயற்சித்தும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
அதனால், யானை குட்டியை தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் ஆஸ்கர் விருது பெற்ற பொம்மன், பெள்ளி தம்பதியிடம் பராமரிப்பதற்காக ஒப்படைக்கப்பட்டது. அவர்களும் அந்த யானை குட்டியை பராமரிக்கும் பணியை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டனர்.
பொம்மன் பெள்ளி இருவரும் குட்டியானையுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ காட்சியை வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
5 மாதங்கள் அந்த குட்டி யானைக்கு நாள்தோறும் ‘லாக்டோஜன்’ பால், குளுக்கோஸ் போன்ற திரவ உணவுகள் வழங்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை முதல் அந்த குட்டி யானை உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.
குட்டியானையின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதை தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ் சிகிச்சை அளித்து வந்தார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை குட்டி யானை உயிரிழந்துள்ளது.
உடல்நிலை குறைபாட்டால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும் குட்டி யானை உயிரிழந்ததற்கான காரணம் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு தான் தெரிய வரும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மோனிஷா
நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு: தியேட்டருக்கு போலீஸ் நோட்டீஸ்!
கலாஷேத்ரா விவகாரம்: முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!