நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி நாளை (ஜூன் 22) ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய்யின் 49வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மாநிலம் முழுவதும் விஜய் மக்கள் இயக்கத்தினர் மற்றும் அவரது ரசிகர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக திருப்பூரைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தினர் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை நடத்த திட்டமிட்டிருந்தனர்.
அதன்படி, விஜய் மக்கள் இயக்கத்தின் அவிநாசி ஒன்றிய மாணவரணி தலைவரான அமீன், ”சிந்தாமணி பஸ் ஸ்டாப் அருகில் கொடிக்கம்பம் நடுதல் மற்றும் தலைக்கவசம் அவசியத்தை வலியுறுத்தி இலவசமாக ஹெல்மெட் வழங்க உள்ளோம்.
மேலும் அப்பகுதியில் நடைபெற இருக்கும் அன்னதானம் நிகழ்ச்சிக்கும் அனுமதி அளிக்க வேண்டும்” என்று கூறி அவிநாசி காவல் உதவி ஆய்வாளரிடம் இன்று விண்ணப்பம் அளித்தார்.
ஆனால் நாளை நடைபெற உள்ள நிகழ்ச்சிக்கு தாமதமாக இன்று அனுமதி கேட்டுள்ளதால், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யமுடியாது என்று கூறி விஜய் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள இந்த சூழ்நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தினரின் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்திருப்பது அவர் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா