இல்லத்தரசிகள் பலருக்கு குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்குமாகப் பார்த்துப் பார்த்து சமையல் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். இப்படிப்பட்ட நிலையில் இருவருக்குமான ஹெல்த் மற்றும் டயட் உணவு இந்த அவரைக்காய் பிரியாணி. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்குக் கொடுத்து அனுப்பலாம். வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் செய்து கொடுக்கலாம்.
என்ன தேவை?
பாசுமதி அரிசி – 2 கப்
அவரைக்காய் – 100 கிராம்
வெங்காயம் – 2
தக்காளி – 2
எலுமிச்சைச்சாறு – 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன்
கரம் மசாலா – ஒன்றரை டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
வெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
நெய் – சிறிதளவு
எப்படிச் செய்வது?
அரிசியை நன்கு கழுவி 3 கப் தண்ணீரில் ஊற வைக்கவும். வெங்காயத்தைக் கரகரப்பாகவும் தக்காளியை விழுதாகவும் அரைத்துக் கொள்ளவும். அவரைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். குக்கரை அடுப்பிலேற்றி வெண்ணெய் இட்டு காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி- பூண்டு விழுது சேர்க்கவும். பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பிறகு அவரைக்காய், மிளகாய்த்தூள், கொத்தமல்லித்தழை, தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, அரிசி மற்றும் ஊற வைத்த தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து கரம் மசாலா, எலுமிச்சைச்சாறு கலந்து மூடி அடுப்பில் ஏற்றி… தீயை அதிகப்படுத்தவும், ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து 5 நிமிடங்கள் கழித்து இறக்கவும். பிரஷர் அடங்கியதும் தேவைப்பட்டால் சிறிதளவு நெய் சேர்க்கவும். பெரும்பாலும் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடாத அவரைக்காயை, பிரியாணியாகச் செய்து கொடுக்கும்போது விரும்பிச் சாப்பிடுவார்கள். வெண்ணெய் உடலின் உஷ்ணத்தைக் குறைப்பதோடு, குழந்தைகளின் வளர்ச்சிக்கும் உதவும்.