மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் அதிக காளைகளை அடக்கி முதல்வரின் சார்பில் வழங்கப்பட்ட ரூ. 7 லட்சம் மதிப்புள்ள காரை விஜய் என்பவர் பரிசாக தட்டிச் சென்றுள்ளார்.
பொங்கல் திருநாளான இன்று (ஜனவரி 15) மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி மிக விமரிசையாக நடைபெற்றது. இன்று காலை 8 மணியளவில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன் மற்றும் பி மூர்த்தி ஜல்லிக்கட்டு போட்டியைத் தொடங்கி வைத்தனர்.
பின்னர் 11 சுற்றுகளாகப் நடைபெற்ற போட்டிகள் மாலை 4 மணியளவில் முடிவடைந்தது. மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த விஜய் என்பவர் 28 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார்.
அவனியாபுரம் கார்த்தி 17 காளைகள் பிடித்து 2வது இடமும், விளாங்குடி பாலாஜி 14 காளைகள் பிடித்து 3வது இடமும் பிடித்தனர். சிறந்த மாடுபிடி வீரர் என்ற அடிப்படையில் விஜய்க்கு அமைச்சர் மூர்த்தி இன்று தங்கக்காசுகளைப் பரிசாக வழங்கினார்.
அதுமட்டுமின்றி முதலிடம் பிடித்த விஜய்க்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில் 7 லட்சம் மதிப்பிலான ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது.
கவனம் ஈர்த்த விஜய்
போட்டியின் இடையே அழகுபேச்சி என்ற பள்ளி மாணவி தனது காளையை களத்தில் அவிழ்த்துவிட்ட நிலையில் அதனை மாடுபிடி வீரர் விஜய் லாவகமாக அடக்கினார்.
இதனால் அவருக்கு ஜல்லிக்கட்டு குழுவால் பரிசுகள் வழங்கப்பட்டன. அந்த பரிசுகளைப் பெற்ற வீரர் விஜய், ஏமாற்றத்துடன் தனது காளையை கயிறு போட்டுப் பிடித்துச் செல்ல முயன்ற பள்ளி மாணவி அழகுபேச்சியிடம் கொடுத்து அவரை ஊக்கப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தார்.
இந்த காட்சியைக் கண்ட பார்வையாளர்கள் பலரும் வீரர் விஜய்யை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
மோனிஷா
’தமிழ்நாடு வாழ்க’ : வண்ண கோலங்களால் டிரெண்ட் செய்த தமிழர்கள்
வாரசுடு : கொண்டாடிய ரசிகர்கள்… வசூலை அள்ளிய விஜய்