மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று (ஜனவரி 15) நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், 17 காளைகளை அடக்கிய கார்த்திக்கிற்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் புகழ்பெற்றது. தை திருநாளின் முதல் நாளான இன்று காலை 7 மணிக்கு அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது. 10 சுற்றுக்களாக நடைபெற்ற இந்த போட்டியில், 817 காளைகள் 433 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியானது மாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
அந்தவகையில், 17 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த மதுரையைச் சேர்ந்த கார்த்திக்கிற்கு, கார் பரிசாக வழங்கப்பட்டது. கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் கார்த்திக் முதலிடத்தை பெற்றிருந்தார். 2023-ஆம் ஆண்டு 17 மாடுகளை பிடித்து இரண்டாம் இடம் பிடித்திருந்தார்.
அதேபோல அவனியாபுரத்தை சேர்ந்த ஜி.ஆர்.கார்த்திக்கின் காளைக்கு சிறந்த காளைக்கான முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு போட்டியில் சார்பு ஆய்வாளர், தலைமைக் காவலர் உள்பட 51 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…