புகழ்பெற்ற எழுத்தாளரான வேல ராமமூர்த்தி, குற்றப் பரம்பரை, குருதி ஆட்டம், பட்டத்து யானை போன்ற புகழ்பெற்ற நாவல்களை எழுதி இருக்கிறார்.
இவர் எழுதிய குற்றப்பரம்பரை என்கிற நாவலை சினிமாவாக எடுக்க முயற்சியும் நடைபெற்று வருகிறது. எழுத்தாளராக மட்டுமின்றி தமிழ் சினிமாவில் நடிகராகவும் கலக்கி வருகிறார் வேல ராமமூர்த்தி.
கிராமத்து வில்லன் கதாபாத்திரங்களுக்கு கச்சிதமாக பொருந்தும் இவர், மதயானை கூட்டம் படம் மூலம் வில்லனாக அறிமுகமானார். பின்னர், பல படங்களில் பல்வேறு வேடங்களில் நடித்து வந்தார்.
மதுரை அவனியாபுரத்தில் இவரது வீடு உள்ளது. இந்த நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டை முன்னிட்டு வேல ராமமூர்த்தி வீட்டு முன்பும் கம்பு வைத்து தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
அதனால், வேல ராமமூர்த்தி வீட்டில் இருந்து வெளியே வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால், கோபமடைந்த வேல ராமமூர்த்தி மனைவி அரிவாளை எடுத்து கயிறுகளை வெட்டி அறுக்க முயன்றார்.
இதையடுத்து, போலீசார் அவரை தடுத்தனர். பின்னர், இன்று ஒரு நாள் பொறுத்துக்கங்க என்று அவருக்கு நிலைமையை எடுத்து கூறினார்.
ஆனால், அவரோ “நாங்க வயசானவங்க. இங்க இருக்கிறோம். வெளியே போகனும்னா எப்படி போக முடியும்? கடைக்கு போகனும்னா எப்படி போக முடியும்?” என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும், “பேரன், பேத்திகள் எப்படி வருவாங்க? ஒவ்வொரு வருஷமும் இன்றைக்கு இரவுதான் கட்டுவாங்க. இந்த முறை இன்றைக்கு காலையிலேயே கம்பை கட்டிட்டிருக்காங்க” என்று தனது பிரச்னையை சொன்னார். பின்னர், போலீசார் அவரை எப்படியோ சமாளித்து வீட்டுக்குள் அனுப்பி வைத்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
சாதுவிடம் சேட்டை : கல்லா கட்ட வந்த யூடியூபருக்கு முதுகு பழுத்தது!