பொங்கலையொட்டி இன்று நடைபெற்று வரும் உலகப் புகழ் பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டின் 8வது சுற்று தற்போது முடிந்துள்ளது.
தமிழகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பொங்கல் திருநாளான இன்று (ஜனவரி 15) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பி, மூர்த்தி கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். பின்னர் வாடிவாசலில் இருந்து சீறி வரும் காளைகளை அடக்கும் சிறந்த வீரர்களுக்குப் பரிசுகளையும் வழங்கினர்.
காலை தொடங்கிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டின் 8வது சுற்று நிறைவடைந்துள்ளது. 8வது சுற்றின் முடிவில் இதுவரை 544 காளைகள் களமிறங்கியுள்ளன. 175 மாடுபிடி வீரர்கள் களமிறங்கியுள்ளனர்.
இதுவரை 28 மாடுபிடி வீரர்கள் காயமடைந்துள்ளனர். காயம் காரணமாகக் காவலர்கள் உட்பட 12 பேர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மதுரை, ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த விஜய் என்பவர் 23 காளைகளை அடக்கி முதலிடத்தில் இருக்கிறார். இவர் 4வது சுற்றில் மட்டும் அதிகபட்சமாக 15 காளைகளை அடக்கியுள்ளார்.
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்தி 15 காளைகளை அடக்கி 2 ஆம் இடத்திலும், மதுரை, விளாங்குடி பகுதியைச் சேர்ந்த பாலாஜி 12 காளைகளை அடக்கி 3வது இடத்திலும் இருக்கிறார்.
சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில் கார், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் 2 இரு சக்கர வாகனமும் பரிசாக வழங்கப்படவுள்ளது.
அதுமட்டுமின்றி, காளையை அடக்கிய வீரர்கள் மற்றும் பிடிபடாத ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தங்ககாசுகள், வெள்ளிகாசுகள், பீரோ, கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
மோனிஷா