பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பது, கொலை செய்வது தான் என்கவுன்ட்டரில் உயிரிழந்த ரவுடிகளின் தொழில் என்று ஆவடி காவல் ஆணையர் சங்கர் தெரிவித்துள்ளார்.
பாடியநல்லூர் முன்னாள் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடிகள் முத்து சரவணன், சண்டை சதீஷ் இருவரும் புதூர் மாரம்பேடு பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில் இன்று (அக்டோபர் 12) அதிகாலை கைது செய்வதற்காக அங்கு சென்ற போலீஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பி செல்ல முயன்ற ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் சம்பவ இடத்தில் முத்து சரவணனும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சதீஷும் உயிரிழந்தனர். ரவுடிகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்த காவலர்கள் நெவிபிரபு, கிருஷ்ணமூர்த்தி, ராஜேஷ் ஆகியோர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் ஆவடி காவல் ஆணையர் சங்கர் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“பார்த்திபன் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் முத்து சரவணன், சண்டை சதீஷ் இருவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசாருக்கு குற்றவாளிகள் பதுங்கி இருக்கும் இடம் குறித்து தகவல் வந்ததன் பேரில் அதிகாரிகள் கைது செய்வதற்காக வந்தனர்.
அப்போது குற்றவாளிகள் அவர்களிடம் இருந்த துப்பாக்கியால் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 3 காவலர்களுக்கு காயம் ஏற்பட்டது. தற்காப்புக்காக காவலர்கள் சுட்ட போது படுகாயம் அடைந்த குற்றவாளிகள் உயிரிழந்துள்ளனர்.
காயமடைந்த காவலர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கூலிப்படையின் தலைவராக இருந்த முத்து சரவணன் மீது 6 கொலை வழக்குகள் உள்ளன.
இவருடைய நெருங்கிய கூட்டாளியான சண்டை சதீஷ் மீது 5 கொலை வழக்குகள் இருக்கின்றன. இது தவிர கொலை முயற்சி வழக்குகள், கொள்ளை வழக்குகளும் இருக்கின்றன.
இவர்களுடைய முக்கியமான தொழில் பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பது. அப்படி பணம் கொடுக்காதவர்களைக் கொலை செய்வது தான்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவலர்களை நேரில் சென்று நலம் விசாரித்தார் ஆவடி காவல் ஆணையர் சங்கர்.
மோனிஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு!