தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. போட்டி நடைபெறும் இடத்திற்கு அருகே தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் செஸ் போர்ட் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியில் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செஸ் போர்டுகள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. மரத்தால் ஆன செஸ் போர்டு, கண்ணாடி, யானை தந்தம், செராமிக், மேலும் பல விலை உயர்ந்த உலோகங்களால் ஆன செஸ் போர்டுகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதற்காக 30-க்கும் மேற்பட்ட அரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு சதுரங்க காய்களும் நுட்பமான வேலைப்பாடுகளை கொண்டுள்ளது.
இந்த கண்காட்சியில் ”ஆர்ட்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ்” எனப்படும் தானியங்கி செஸ் போர்டும் இடம் பெற்றுள்ளது. காய்களை நகர்த்தி விளையாடும் போது எதிர் அணியில் உள்ள காய்கள் தாமாக நகர்வது பார்வையாளர்களை ஆச்சரியப்பட செய்கிறது.
இந்த தானியங்கி செஸ் போர்டு ரோபோட் கைகளைக் கொண்டு மின்காந்தம் மூலம் இயங்குகிறது. நாம் காய்களை நகர்த்தி விளையாடும் போது தானியங்கி பலகையில் உள்ள ரோபோட் கை தனது அடுத்த நகர்வை தீர்மானித்து செயல்படுகிறது.
தானியங்கி செஸ் போர்டு 35 லிருந்து 45 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் நுட்பமான வேலைப்பாடுகளை கொண்ட செஸ் போர்டுகள் மற்றும் அனைத்து வகையான செஸ் போர்டுகளும் விற்பனைக்காகவும், கண்காட்சிக்காகவும் வைக்கப்பட்டுள்ளன.
மாமல்லபுரம் ஏற்கனவே சிறந்த சுற்றுலா தளமாக அறியப்பட்ட நிலையில், செஸ் ஒலிம்பியாட் மூலம் மேலும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை செயல்பட்டு வருகிறது.
மோனிஷா