இரு விரல் பரிசோதனை விவகாரத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் மருத்துவரிடம் பேசிய ஆடியோ தன்னிடம் இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
குழந்தைகள் திருமணம், இரு விரல் பரிசோதனை விவகாரத்தில் அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆணைய உறுப்பினர் ஆனந்த் கூறியது குறித்து இன்று (மே 31) செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மா.சுப்பிரமணியன்,
“ஆளுநரை திருப்திபடுத்துவதற்காக இரு விரல் பரிசோதனை நடந்தது என்று அறிக்கை சமர்ப்பிக்கிறார் ஆணைய உறுப்பினர். என்னை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுகிறார். இந்த அதிகார போதையெல்லாம் சரியானதல்ல. ஆணைய உறுப்பினர் மருத்துவர் சுகன்யாவிடம் என்ன பேசினார் என்ற ஆடியோ என்னிடம் இருக்கிறது. அந்த ஆடியோவை தேவைப்பட்டால் வெளியிடத் தயார்.
இந்த விவகாரத்தை பெரிதாக்க நாங்கள் விரும்பவில்லை. ஏனென்றால் இது குழந்தைகள் விஷயம் என்பதால், அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அமைதியாக இருக்கிறோம். இவர்களிடம் மன்னிப்பு கேட்கிற அளவுக்கு நாங்கள் தரம் குறைந்தவர்கள் அல்ல” என்றார்.
பின்னணி என்ன?
சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு கட்டாய கன்னித்தன்மை பரிசோதனையாக இரு விரல் பரிசோதனை நடத்தியுள்ளனர் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டினார். குழந்தை திருமணம் நடத்தி வைத்ததாக தீட்சிதர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து மின்னம்பலம் புலனாய்வு செய்து செய்தி வெளியிட்டது. நமது விசாரணையில் குழந்தைகள் திருமணம் நடந்தது உறுதி செய்யப்பட்டது. இரு விரல் பரிசோதனை நடைபெறவில்லை என்பதும் அதற்கு பதிலாக ஸ்வாப் டெஸ்ட் எடுக்கப்பட்டதும் தெரியவந்தது. குழந்தை திருமணங்கள் நடந்ததற்கான புகைப்பட ஆதாரங்களும் மின்னம்பலத்துக்கு கிடைத்தன.
இந்நிலையில் ஆளுநர் கூறிய விவகாரம் குறித்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்தது.
இந்த ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த், நேரடியாக சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்று தீட்சிதர்களிடமும், பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமிகளிடமும் விசாரணை நடத்தினார்.
இந்த விசாரணையை தொடர்ந்து முதலில் அவர், இரு விரல் பரிசோதனை நடந்ததற்கான ஆதாரம் இல்லை என்றார். அதேசமயம் குழந்தைகள் திருமணம் குறித்து சிறுமிகளிடம் கேட்டதில் எங்களிடம் வற்புறுத்தி கேட்டதால் தான் திருமணம் நடந்தது என ஒப்புக்கொண்டோம் என்று கூறினார்கள் என்றார்.
‘ஆணையத்தின் உறுப்பினர் இப்படி கூறியதை தொடர்ந்து ஆளுநர் கூறியிருப்பது பொய் என்று உறுதியாகியுள்ளது. இதனால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின. சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “ஆளுநர் மீது வழக்குப்போட வேண்டும்” என்றார்.
இதையடுத்து தன்னிலை விளக்கம் அளித்த ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த், “ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியதுதான் உண்மை. நான் கூறியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது” என்று கூறினார்.
இந்தசூழலில் கடந்த மே 28ஆம் தேதி புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த், “இரு விரல் பரிசோதனை, குழந்தை திருமண விவகாரத்தில் நான் இரட்டை நிலைப்பாடு எடுக்கவில்லை.
குழந்தைகளிடம் விசாரணை செய்தபோது, எப்படி சோதனை செய்தார்கள் என்று கேட்டு அதன் ஆடியோ என்னிடம் உள்ளது. அதில், கையில் க்ளவுஸ் போட்டு பிறப்புறுப்பில் தொட்டார்கள் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் மா.சுப்பிரமணியன் உண்மைக்கு புறம்பானது என்கிறார்.
ஆளுநரை குறை கூறுவதற்காக இப்படி எல்லாம் நடந்து கொள்கின்றனர். அமைச்சர் மா.சுப்பிரமணியத்துக்கு ப்ரோட்டோகால் தெரியவில்லை. என்னிடம் 132 பக்க விசாரணை அறிக்கை இருக்கிறது. இரு விரல் பரிசோதனை செய்வதற்கான ஆதாரத்தை வெளியிட்டால் பொதுவெளியில் அமைச்சர் மன்னிப்பு கேட்க தயாரா?. அவர் கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறினார்.
“சிதம்பரம் கோயில் என்பது தனியாருடையது. கோடிக்கணக்கான சொத்துகள் இருக்கிறது. அதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தீட்சிதர்களை துன்புறுத்துகிறார்கள். அதற்காக எடுத்துக்கொள்ளப்பட்ட ஆயுதம் தான் இருவிரல் பரிசோதனையும், குழந்தை திருமணமும்” என்றார்.
இந்த விவகாரத்தில் புகைப்படங்கள் எல்லாம் வெளியாகியிருக்கிறது. அது எல்லாம் சிறுமிகள் வயதுக்கு வந்த போது சடங்குகள் செய்த போது எடுக்கப்பட்டவை என தீட்சிதர்கள் கூறுகிறார்கள் எனவும் குறிப்பிட்டார் ஆனந்த். இதையடுத்து கடந்த மே 29 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தார்.
இந்தசூழலில் இன்று, “ஆனந்த் மருத்துவரிடம் பேசிய ஆடியோ தன்னிடம் இருக்கிறது. அதை வெளியிட தயார்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
பிரியா
டாக்டரை குத்திய நோயாளி: ஐசியூ வாசலில் ஆயுதம் ஏந்திய போலீஸாரை நிறுத்தக் கோரிக்கை!
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!