குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ பணிகளுக்கான முதன்மைத் தேர்வின் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவந்துள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.
தமிழக அரசின் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. வருடந்தோறும் தேர்வு அட்டவணையை வெளியிடும் தேர்வாணையம், தேர்வுகளில் சில மாற்றங்களையும் அவ்வப்போது செய்து வருகிறது.
இதன்படி, ஏப்ரல் மாதம் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ நிலையில் உள்ள பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வுகள் தனித்தனியாக நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. தொடர்ந்து, குரூப் 2 பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கான மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டமும், குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வுக்கான புதிய பாடத்திட்டமும் டிஎன்பிஎஸ்சியால் வெளியிடப்பட்டுள்ளது.
இதுத்தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான திருத்தியமைக்கப்பட்ட தேர்வுக்கால அட்டவணை மே 24 அன்று வெளியிடப்பட்டது.
அதில், தேர்வர்களின் நலன் கருதி, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II மற்றும் தேர்வு-IIA-க்கு தனித்தனியே முதன்மைத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II-ன் முதன்மை எழுத்துத் தேர்விற்கான மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டமும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II-A-ன் முதன்மைத் தேர்விற்கான
புதிய பாடத்திட்டமும்
https://www.tnpsc.gov.in/English/syllabus.html என்ற தேர்வாணைய இணையதளப் பக்கத்திலும்,
தேர்வுத் திட்டம் https://www.tnpsc.gov.in/English/scheme.html என்ற தேர்வாணைய இணையதள பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளன.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The revised syllabus of Combined Civil Services (Main) Examination-II (Group II Services), the syllabus for Combined Civil Services (Main) Examination – Group IIA Services and the scheme of examination are hosted on the Commission’s website.
Syllabus-https://t.co/kP8hsohnOL… pic.twitter.com/tODu24AduQ— TNPSC (@TNPSC_Office) May 24, 2024
இதில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியை பயன்படுத்தி பாடத்திட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை டிஎன்பிஎஸ்சி தேர்விற்காக தயாராகி வருபவர்கள் அறிந்துக் கொள்ளலாம்.
இந்த பாடத்திட்டத்தின் படி, குரூப் 2 ஏ முதன்மை தேர்வில், தமிழ் தகுதித் தாள் மட்டும் விரிவாக விடை அளிக்கும் வகையிலும், பொது அறிவு தாள் கொள்குறி முறையில் விடையைத் தேர்வு செய்யும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், பொது அறிவுத்தாளில், 50 சதவீத வினாக்கள் பட்டப்படிப்பு தரத்திலான பொது அறிவு சார்ந்தும், 20 சதவீத வினாக்கள் பத்தாம் வகுப்பு தரத்திலான கணக்குகளும், 30 சதவீத வினாக்கள் பத்தாம் வகுப்பு தரத்திலான பொது ஆங்கிலம் அல்லது பொது தமிழில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சியின் ஆண்டு திட்ட அட்டவணைப்படி, 2,300 காலிப்பணியிடங்கள் கொண்ட குரூப்-2 மற்றும் குரூப் 2 ஏ-க்கான தேர்வு அறிவிப்பு ஜூன் 28-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பு புதிய பாடத்திட்டத்தை டிஎன்பிஎஸ்சி மாற்றியுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“நிர்வாக குளறுபடியால் சிக்கலில் போக்குவரத்து கழகம்” : சிஐடியு சௌந்தரராஜன்
மீண்டும் சிரஞ்சீவி – மோகன் ராஜா கூட்டணி.. தனி ஒருவன் 2 என்ன ஆச்சு..?