சிறையில் சவுக்கு சங்கர் மீது தாக்குதலா… விசாரணைக்கு உத்தரவு!

தமிழகம்

சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டதாக அவரது தரப்பு வழக்கறிஞர் கூறியிருந்த நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

யூடியூபர் சவுக்கு சங்கர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பெண் காவலர்கள் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாகர் கோவை சைபர் கிரைம் காவல் உதவி ஆய்வாளர் சுகன்யா புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் தேனியில் வைத்து சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். வரும் 17 ஆம் தேதி வரை கோவை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சவுக்கு சங்கர் சிறையில் தாக்கப்படுவதாக அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் 4 வது குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று புகார் மனு தாக்கல் செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சிறையில் சவுக்கு சங்கரின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. சவுக்கு சங்கர் சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்னதாக எடுத்த மருத்துவ பரிசோதனையில் அவர் நன்றாக இருக்கிறார் என தெரிவிக்கப்பட்டது.

தற்போது அவருக்கு கை, கால்களில் அடிபட்டுள்ளது. நடப்பதற்கு சிரமப்படுகிறார். காயம் வெளியில் தெரியக் கூடாது என்பதற்காக துணியை சுற்றி அடித்திருக்கிறார்கள்.

ஸ்கேன் செய்து பார்த்தால் தான் எங்கெங்கு முறிவு ஏற்பட்டிருக்கிறது என தெரியவரும். இதுவரை எக்ஸ்ரே கூட எடுக்கவில்லை. பெயின் கில்லர் டேப்லெட் அதிகம் சாப்பிட சொல்லியிருக்கிறார்கள்” என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இந்தநிலையில் சிறையில் காவலர்கள் தாக்கியதாக வழக்கறிஞர் அளித்த புகார் குறித்து விசாரிக்க, சட்டப்பணிகள் ஆணை குழுவுக்கு கோவை ஜே.எம்.4 மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே போலீசார் சார்பில் சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சரவணபாபு, 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

சவுக்கு சங்கர் ஜாமீன் கேட்ட மனுவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், சிறையில் வைத்து சவுக்கு சங்கர் கை உடைக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் பேட்டி அளித்திருந்த நிலையில், “சவுக்கு சங்கர் சிறையில் தாக்கப்படவில்லை. சிறையில் எந்த கைதியும் தாக்கப்படுவதில்லை” என்று சிறைத்துறை ஏடிஜிபி மகேஸ்வர் தயாள் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு ஒத்திவைப்பு – இடைக்கால ஜாமீன் மறுப்பு!

வைரமுத்து – இளையராஜா இடையே போர் : குஷ்பு பளீர் பதில்!

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *