attack on bihar labours tamilnadu

பீகார் தொழிலாளர்கள் மீது தாக்குதலா?: தமிழ்நாடு போலீஸ் கடும் எச்சரிக்கை!

தமிழகம்

தமிழகத்தில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வட இந்தியர்கள் குறிப்பாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் இரு வீடியோக்கள் வைரலானது.

இந்த வீடியோவை பார்க்கும் வட மாநிலத்தவர்கள் மத்தியில் தவறான ஒரு எண்ணத்தையும் அச்சத்தையும் உருவாக்கும் வகையில் அமைந்திருந்தது.

இதுதொடர்பாக கவலை தெரிவித்திருந்த பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகத்தில் பணிபுரியும் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து செய்தித்தாள்கள் மூலம் அறிந்தேன்.

தமிழக அரசு அதிகாரிகளுடன் பேசி, அங்கு வசிக்கும் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பீகார் தலைமைச் செயலர் மற்றும் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு இந்த வீடியோக்கள் குறித்து விளக்கமளித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக பீகாரில் உள்ள ஒருவர் தவறான வீடியோவை வெளியிட்டுள்ளார். தற்போது இரண்டு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அவை திருப்பூர் மற்றும் கோவையில் எடுக்கப்பட்டிருக்கிறது.

அதில் ஒன்று பீகார் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் இரு குழுக்களுக்கு இடையேயான மோதல் மற்றும் மற்றொரு வீடியோ கோயம்புத்தூரில் வசிக்கும் இரண்டு உள்ளூர்வாசிகளுக்கு இடையேயான மோதல் ஆகும்.

தமிழ்நாட்டு மக்களுக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் இடையிலான மோதல் அல்ல. இதுதான் உண்மை நிலவரம்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழக டிஜிபியின் விளக்கத்தை தொடந்து அந்த வீடியோக்கள் போலியானவை என பீகார் போலீசாரும் கூறியுள்ளனர்.

இதனிடையே நேற்று பீகார் சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. நேற்றைய கூட்டத்தொடரின் போது, தினக்கூலிகளாக பிகார் தொழிலாளர்கள் புலம்பெயர்ந்து செல்வது தொடர்பாகவும், மாநிலத்தில் வேலைவாய்ப்பை உருவாக்குவது தொடர்பாகவும் விவாதிக்க எதிர்க்கட்சித் தலைவர் விஜய் குமார் சின்ஹா ​​தலைமையிலான பாஜக உறுப்பினர்கள் ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்தனர்.

மேலும், தமிழகத்தில் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படும் இந்த சூழலில் கடந்த மார்ச் 1ஆம் தேதி நடந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவில் பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் எப்படி கலந்துகொள்ளலாம் என கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தமிழக டிஜிபியின் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தேஜஸ்வி யாதவ், “பீகார் மக்கள் தமிழகத்தில் பாதுகாப்பாக இல்லை என்று கூறி பழைய வீடியோ பரப்பப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

அதுபோன்று தமிழக காவல்துறை மீண்டும் இன்று இந்தியில் ட்விட்டரில் விளக்கமளித்துள்ளது.

அதில், “இந்த கொலை சம்பவம் கோவையில் சமீபத்தில் தனிப்பட்ட விரோதம் காரணமாக நடந்தது. கொல்லப்பட்டவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். இந்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வீடியோ பீகார் தொழிலாளர்களுடன் தொடர்புடையது அல்ல.

தவறான செய்திகள் மற்றும் வதந்திகளை பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைதளங்களில் வீடியோக்களை பகிர்வதற்கு முன் அதன் உண்மை தன்மையை ஆராய வேண்டும்” என்று எச்சரித்துள்ளது.

பிரியா

10ஆம் தேதி பதவியேற்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்?

“நாம் தமிழர் என்ற ஒரு கட்சி இருக்கிறதா?”: இளங்கோவன் கேள்வி!

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *