சென்னை, மெரினா கடற்கரையில் மதுபோதையில் போலீசாரிடம் அட்ராசிட்டியில் ஈடுபட்ட ஜோடி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணிக்கு, சென்னை மெரினா கடற்கரை நொச்சிக்குப்பம் அருகே சாலையின் குறுக்கே காரை நிறுத்தி விட்டு ஜோடி இருவர் அட்ராசிட்டியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் யார் நீங்கள்? எங்கிருந்து வருகிறீர்கள்? என விசாரித்துள்ளனர்.
காவலர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க மறுத்த அவர்கள், ஆபாச வார்த்தைகளால் காவலரை அர்ச்சித்துள்ளனர். காவலரை பார்த்து பல்லி மூஞ்சு என்றும் உதயநிதி ஸ்டாலினை கூப்பிட வா பாக்குறியா என்று கூறியும் அடாவடியில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் வீடியோ எடுத்த போது, வீடியோ எடுக்குறீயா? இந்தா எடுத்துக்கோ?. செல்ஃபி தரோம் என்று கெத்து காட்டியுள்ளனர். இவர்கள் கெத்து காட்டிய வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இப்படி அட்ராசிட்டியில் ஈடுபட்டவர்கள் யார்? இருவரும் கணவன் – மனைவியா? கள்ளக்காதலர்களா என மயிலாப்பூர் போலீசார் விசாரித்து வந்தனர். கார் பதிவெண்ணை எடுத்து விசாரித்ததில் அட்ராசிட்டியில் ஈடுபட்டவர்கள், சந்திரமோகன் – தனலட்சுமி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், போலீசார் சென்னை முழுக்க அந்த ஜோடியை சல்லடை போட்டு தேடினர். இந்த நிலையில், சந்திரமோகன் தனலட்சுமி இருவரும் வேளச்சேரியில் உள்ள தங்கும் விடுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
போலீசாரின் விசாரணையை அடுத்து சந்திரமோகன் மன்னிப்பு கேட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. லாட்ஜில் வைத்து கைது செய்யும் போது எடுக்கப்பட்ட வீடியோவில், அதிக போதையில் நிதானம் இல்லாமல் பேசியதாக அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து இருவரையும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களுக்கு நவம்பர் 6ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
90 களில் நாட்டை உலுக்கிய நாவுக்கரசு கொலை வழக்கு… கொலையாளி ஜான் டேவிட்டுக்கு ஜாமீன்!
தீபாவளிக்கு மக்கள் தங்கம் வாங்குவார்களா? இன்றைய நிலவரம் என்ன?