சென்னை வேளச்சேரி, தேவி கருமாரியம்மன் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரின் மனைவி கவிதா. இவர்கள் இருவரும் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்க்கின்றனர். இந்த தம்பதி செங்கல்பட்டு மாவட்டம் வல்லாஞ்சேரியை சேர்ந்த வெங்கட சுரேஷ் என்ற ஜோதிடரிடத்தில் ஜோசியம் பார்க்க சென்றுள்ளனர்.
அப்போது, வேலையை விட்டு விட்டு சொந்த தொழில் செய்தால் கோடீஸ்வரராக நீங்கள் மாறலாம் என்று அந்த தம்பதியிடத்தில் ஜோதிடர் கூறியுள்ளார்.
மேலும், தனக்கு மத்திய அரசில் செல்வாக்குள்ளதாகவும் பெட்ரோல் பங்க் வைக்க தன்னால் லெசென்ஸ் வாங்கிக் கொடுக்க முடியுமென்றும் கூறியுள்ளார்.
இதை நம்பிய அந்த தம்பதி திருவண்ணாமலையில் தங்களுக்கு சொந்தமாக 65 சென்ட் நிலம் இருப்பதாகவும், அங்கு பெட்ரோல் பங்க் வைக்கலாம் என்றும் அவரிடத்தில் கூறியுள்ளனர். லைசென்ஸ் வாங்கி தருவதற்காக ஜோதிடர் வெங்ட சுரேஷ், 50 லட்சம் கேட்டுள்ளார். அந்த பணத்தை தர தம்பதி ஒப்புக் கொண்டனர்.
பின்னர், வெங்கடசுரேஷ் திருமுடிவாக்கத்தை சேர்ந்த விஜய் பாஸ்கர் என்பவரை அந்த தம்பதியிடம் அறிமுகப்படுத்தியுள்ளார். விஜயபாஸ்கரின் தந்தை டெல்லியில் ரா உளவு அமைப்பில் வேலை பார்ப்பதாகவும் டெல்லியில் நல்ல செல்வாக்கு உள்ளவர் என்று அந்த தம்பதியிடம் கூறி ஆசை வார்த்தை காட்டியுள்ளனர்.
இதையடுத்து, ஜோதிடரை நம்பிய அந்த தம்பதி 29.8.2022-ம் தேதி முதல் 1.9.2022-ஆம் தேதி வரை 50 லட்சத்தை ஜோதிடரின் வங்கி அக்கவுண்டுக்கு மாற்றியுள்ளனர். ஆனால், பணத்தை வாங்கிய ஜோதிடர் சொன்னபடி பெட்ரோல் பங்க் வைக்க லைசென்ஸ் பெற்று தரவில்லை.
வீட்டுக்கு சென்று அந்த தம்பதி பணத்தை கேட்ட போது, ’பணமெல்லாம் தர முடியாது உங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்’ என்று தெனாவட்டாக கூறியதோடு, கூலிப்படையினரை வைத்து மிரட்டவும் செய்துள்ளார்.
தொடர்ந்து, பாதிக்கப்பட்ட தம்பதி, கடந்த ஜனவரி 4 ஆம் தேதி வேளச்சேரி போலீசில் புகாரளித்தார். இதை அறிந்ததும் வெங்கட சுரேசும், விஜயபாஸ்கரும் தலைமறைவாகி விட்டனர்.
கடந்த 11 மாதங்களாக அவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், ஜோதிடர் வெங்கடசுரேஷ் மட்டும் நேற்று சிக்கினார். விஜயபாஸ்கரை போலீசார் இன்னும் தேடி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
விஜய்யுடன் விமான பயணம்: வதந்திகளுக்கு நாய், சேவலை சுட்டிக்காட்டி திரிஷா பதிலடி!
மாநில அரசுக்கு அன்றாடம் ’தலைவலி’ கொடுப்பதற்குத்தான் ஓர் ஆளுநரா? : கி.வீரமணி கேள்வி!