திண்டுக்கல்லைச் சேர்ந்த யூடியூபர் ஒருவரை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி பணம் பறித்த துணை நடிகை திவ்யபாரதி திடீர் மாயமாகியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலைச் சேர்ந்த ஆனந்தராஜ், யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கி, அதில் தனது கவிதைகளை வீடியோவாக வெளியிட்டு வந்துள்ளார். அந்த வீடியோக்களில் திண்டுக்கல் தாடிக்கொம்புவைச் சேர்ந்த சினிமா துணை நடிகையான திவ்யபாரதியை நடிக்கவைத்திருக்கிறார். இதற்கிடையே இருவருக்கும் இடையிலான நட்பு காதலாக மலர்ந்துள்ளது.
இதைத் தொடர்ந்து குடும்ப சகிதமாக திவ்யபாரதி, ஆனந்தராஜ் வீட்டில் போய் தங்கியுள்ளார். ஒருகட்டத்தில் ஆனந்த்ராஜ் பணம் காய்க்கும் மரம் என நன்றாக தெரிந்துகொண்ட திவ்யபாரதி, மருத்துவச் செலவிற்காக 9 லட்சம் ரூபாயைப் பெற்றுள்ளார். தன் வருங்கால மனைவிக்குத்தானே கொடுக்கிறோம் என அவரும் வீட்டில் இருந்த திவ்யபாரதி கேட்கும்போதெல்லாம் கொடுத்திருக்கிறார்.
ஆனந்த்ராஜ் புகார்!
இந்த நிலையில், திவ்யபாரதியை திருமணம் செய்துகொள்ள ஆனந்தராஜ் விரும்பியதை அடுத்து, இதுதொடர்பாக அவரிடம் சம்மதம் கேட்டுள்ளார். ஆனால், திவ்யபாரதி, கல்யாணம் செய்யாமல் காலம் தாழ்த்திவந்துள்ளார். அத்துடன், அவரிடம் சண்டை போடத் தொடங்கி ஆனந்தராஜை அவாய்டு செய்யவும் ஆரம்பித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த ஆனந்தராஜ் அதற்குப் பிறகுதான் திவ்யபாரதியை பற்றி விசாரித்திருக்கிறார்.
அவர் ஏற்கெனவே திருமணமானவர் என்பதும், அவருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. திவ்யபாரதியால் தாம் ஏமாற்றப்பட்டோம் என்பதைப் புரிந்துகொண்ட ஆனந்த்ராஜ், இந்த மாதம் ஆகஸ்ட் 2ம் தேதி தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும், மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். இதில் 30 லட்சம் ரூபாயை இழந்துள்ளதாகவும், அவர் ஒரு மோசடிப் பேர்வழி எனவும் போலீசாரிடம் புகார் அளித்திருந்தார்.
போலீசார் விசாரணை
இதுதொடர்பாக மாவட்டக் குற்றப்பதிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது நடத்திய விசாரணையில் திவ்யபாரதி போலீசாரிடம், ”ஆனந்தராஜ் என்னை சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி 10 லட்ச ரூபாயை வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டார்.
அதுமட்டுமல்லாது, அவரது ஆசைக்கு இணங்கும்படி கூறி பாலியல் தொந்தரவும் கொடுத்தார். இதற்கு, தாம் உடன்படாததால் என்மீது மோசடி புகார் சுமத்துகிறார். என் கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் வாழும் எனக்கு கொலைமிரட்டல் விடுக்கிறார்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், திவ்யபாரதி தொடர்பான ஆடியோ விவரங்களை தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஆனந்த்ராஜ் வெளியிட்டிருந்தார். அதனைக் கேட்ட திவ்யபாரதி, விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றார்.
இதனால் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திவ்யபாரதி, இன்று (ஆகஸ்ட் 8) திடீரென்று மாயமாகி உள்ளார். இதுகுறித்து திண்டுக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெ.பிரகாஷ்
பா.ரஞ்சித் படத்தின் ‘ரங்கராட்டினம்’ இன்று வெளியீடு!