திருநெல்வேலி அம்பாசமுத்திர ஏ.எஸ்.பி பல்பீர் சிங் விசாரணைக்கு ஆஜராகுமாறு மனித உரிமை ஆணையம் இன்று(மார்ச் 31) சம்மன் அனுப்பியுள்ளது.
அம்பாசமுத்திர ஏ.எஸ்.பி பல்பீர் சிங் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்களின் வாயில் ஜல்லி கற்களைப் போட்டு பல்லை உடைத்து கொடுமைப் படுத்தியதாக குற்றசாட்டு எழுந்தது.
இதுவரை 30க்கும் மேற்பட்டவர்களின் பற்களை அவர் பிடுங்கியிருப்பதாக சமூக வலைதளங்களில் பல வீடியோக்கள் வைரலாகின.
இந்நிலையில்,அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் நடவடிக்கை எடுத்தார். பல்பீர் சிங்கை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளதாகச் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக வெளியான செய்திகளின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட செல்லப்பா, இசக்கி முத்து, சுபாஷ், வேத நாராயணன் உள்ளிட்ட 5பேர் வழக்கறிஞர் மகாராஜன் தலைமையில் சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் இன்று(மார்ச் 31) ஆஜராகினர்.
அவர்களிடம் பற்களைப் பிடுங்கிய விவகாரம் தொடர்பாகக் கேள்விகள் எழுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணையைத் தொடர்ந்து ஏஎஸ்பி பல்வீர் சிங் வரும் ஏப்ரல் 3ஆம்தேதி மாநில மனித உரிமை ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஏஎஸ்பி பல்பீர் சிங்கிற்கு எதிராக கொல்கத்தாவை சேர்ந்த வழக்கறிஞர் ஆசிஸ் கோயல் தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனு கொடுத்துள்ளார்.
ஊடகங்களில் வெளியான செய்தியை குறிப்பிட்டும், பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான செல்லப்பா கூறியதை குறிப்பிட்டும் மனு அளித்துள்ளார்.
அதில், சம்பவத்தன்று மதியம் 1.30மணி முதல் மாலை 4.30வரை பலரது பற்களை ஏஎஸ்பி பிடுங்கி கொடுமைப் படுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டதாக தேசிய மனித உரிமை ஆணையம், ஆசிஸ் கோயலுக்கு பதில் அளித்துள்ளது.
பிரியா
10 ஆம் வகுப்பு தேர்விலும் மாஸ் ஆப்சென்ட்? ஆசிரியர்களுக்கு உத்தரவு! தலையிடுவாரா அன்பில் மகேஷ்?
IPL 2023: சிஎஸ்கே…பலம்? பலவீனம்?