பல்லை பிடுங்கிய ஏஎஸ்பியின் பதவியை பிடுங்கிய அஸ்ரா கார்க்

தமிழகம்

காவல்நிலையங்களில் விசாரணை கைதிகள் மீதான கொடூரமான தாக்குதல்கள் என்பது தொடர் கதையாகி வருகிறது. இதுவரை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் கை, கால்கள் உடைந்து வருவதை பார்த்திருப்போம், கேள்விப் பட்டிருப்போம்.

ஆனால் திருநெல்வேலியில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை போலீஸ் பிடுங்கிய கொடூர நிகழ்வு அரங்கேறியுள்ளது.

கடந்த சில தினங்களாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று பரவி வருகிறது.

அதில், அம்பாசமுத்திரம் அருகே சிவந்திபுரம் பகுதியைச் சேர்ந்த செல்லப்பா என்பவர் பேசுகிறார்.

தனது இரு சகோதரர்களுடன் வீடியோவில் தோன்றும் செல்லப்பா, “அம்பாசமுத்திரம் உதவிக் காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மற்றும் இரண்டு காவலர்களால் கொடூரமான முறையில் சித்திரவதை செய்யப்பட்டவர்களில் தானும் ஒருவர்” என்று கூறுகிறார்.

மேலும் அவர், “எங்கள் நண்பர் சுபாஷ். அவர் திருமணமான ஒரு பெண்ணை காதலித்ததால் ஒரு சிறிய பிரச்சினை ஏற்பட்டது. இதில் அந்த பெண்ணின் கணவர் சுபாஷை அடித்துவிட்டார்.

இதை நாங்கள் சென்று தட்டிக் கேட்கும்போது தூத்துக்குடியில் இருந்து ஆட்களை இறக்கி எங்களுடையை கடையை தாக்கி எங்களை வெட்டுவதற்காக வந்தார்கள்.

அப்போது அம்பை தியேட்டர் அருகே அவர்களை பிடித்து அவர்களிடமிருந்து ஆயுதங்களை பிடுங்கி போலீசாரிடம் ஒப்படைத்தோம்.

ஆனால் நாங்கள் தான் குற்றவாளி என்று கூறி எங்கள் தரப்பில் 6 பேரையும், எதிர் தரப்பில் இருந்து 3 பேரையும் ஒரு ஆட்டோவில் அடைத்து அம்பை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றார்கள்.

அங்கு சென்ற போது ஏஎஸ்பி பல்வீர் சிங் போலீஸ் உடை அணிந்திருந்தார். பின்னர் ஒரு ட்ராக் டவுசர், டி சர்ட்டும் அணிந்து கொண்டு வந்தார். இரண்டு கைகளிலும் வெள்ளை கலர் க்ளவுஸ் போட்டிருந்தார்.

என்னை முதலில் போலீசார் உள்ளே அழைத்தனர். இரண்டு போலீஸ்காரர்கள் என் கையை பிடித்துக்கொண்டார்கள். அப்போது பல்பீர் சிங் சார், ஜல்லி கற்களை கொண்டு எனது பற்களை தட்டி தட்டி உடைத்தார். அதோடு வாய்க்குள் ஜல்லி கற்களை போட்டு அங்கேயும், இங்கேயும் ஆட்டி கன்னத்தில் அறைந்தார்.

ASP Balveer Singh Change to Waiting list

ரத்தம் கொட்டியும் விடவில்லை. ஜல்லியை கொண்டு உதட்டையெல்லாம் கிழித்தார்.
இதையடுத்து என்னை உட்கார வைத்துவிட்டு என் அண்ணன், என் தம்பிகளை அடிக்கத் தொடங்கினார். என் அண்ணன் மாரியப்பனுக்கு ஒன்றரை மாதத்துக்கு முன்புதான் திருமணமானது.

அவரது பிறப்புறுப்பு பகுதியை நசுக்கி, நெஞ்சில் ஷூ காலால் மிதித்து கொடுமை படுத்தினார். மனதளவில் அவர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்.

போலீஸ் தாக்கியதில் ஒருவருக்கு சுமார் 10 மில்லி ரத்தமாவது வந்திருக்கும். போலீசார் கோர்ட்டுக்கு அழைத்து செல்லும் போது நீதிபதி கேட்டால், போலீஸ் அடித்ததாக சொல்லக் கூடாது. பைக்கில் இருந்து விழுந்துவிட்டேன். மரத்தில் ஏறும் போது விழுந்துவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும் என போலீசார் மிரட்டினர். இதனால் ஜட்ஜ் ஐயா கேட்கும் போது கூட போலீஸ் அடிக்கவில்லை என்றுதான் சொன்னோம்.

வாயில் கல்லை போட்டுவிட்டு தலை கன்னத்தில் அடித்ததால் எங்களால் சாப்பிடக் கூட முடியவில்லை. தற்போது கண்டிஷன் பெயிலில் உள்ளோம். இப்படி நாங்கள் பேட்டி கொடுப்பதால் எங்களை எதாவது செய்வார்களோ என அச்சமாகவும் இருக்கிறது. இதற்கு மேல் அடி வாங்க எங்கள் உடம்பில் தெம்பு இல்லை. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என்று வேதனையுடன் பேசினார்.

செல்லப்பாவின் சகோதரர் இசக்கிமுத்து கூறுகையில், “நாங்கள் ரவுடிகள் என கருதி ஏஎஸ்பி உங்கள் தலைவர் யார் என கேட்டார். நாங்கள் ரவுடிகள் இல்லை, புகார்தாரர்கள் என்று சொன்னோம். ஆனால் இந்தியில் எதோ பேசிவிட்டு எங்களை அடிக்க ஆரம்பித்தார்” என்று தெரிவித்துள்ளார்.

இதுபோன்று ஜமீன் சிங்கம்பட்டியைச் சேர்ந்த சூர்யாவின் பல்லையும் போலீஸ் அதிகாரி பல்பீர் சிங் பிடுங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சிங்கப்பட்டி பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தியதாக சூர்யா மீது எழுந்த புகாரைத் தொடர்ந்து அவரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர். அப்போது அவரது பல்லை பல்பீர் சிங் பிடுங்கி எடுத்துவிட்டதாகவும், அதனால் சூர்யா வலியால் துடிதுடித்ததாகவும் கூறப்படுகிறது.

இதுபோன்று சிறு சிறு குற்றங்களை செய்பவர்களை அழைத்துச் சென்று பற்களை பிடுங்குவதாகவும், இதற்கு அம்பாசமுத்திர காவல் நிலையத்தில் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் துணையாக இருக்கிறார்கள் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கூறுகின்றனர்.

இந்த தகவல்கள் வேகமாக பரவ ஏஎஸ்பி பல்பீர் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பின் தலைவரும் வழக்கறிஞருமான மகாராஜன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “சின்ன சின்ன குற்றச்செயல்களில் ஈடுபடும் இளைஞர்களை அழைத்துச் சென்று இந்த போலீஸ் அதிகாரி பற்களை பிடுங்குகிறார்.

இதற்கு முன்னதாக கை, கால்களை உடைத்து கேள்வி பட்டிருப்போம். இப்போது குற்றவாளிகளை பிடிக்க செல்லும்போது காலுக்கு கீழே சுடுவதை பார்க்கிறோம். இதெல்லாம் கொடூர குற்றவாளிகள் மீது நடத்தப்படுகிற தாக்குதல்கள் என வைத்துக்கொள்வோம்.

கடந்த மாதம் நடந்த ஒரு அடிதடி சம்பவத்துக்காக ஒரு நாடார் சமூக இளைஞரை அழைத்துச் சென்று 7 பற்களை பிடுங்கிருக்கிறார் இந்த ஏஎஸ்பி.

சுயநினைவோடு இருக்கும்போது, எந்த விதமான வலி மாத்திரையும் கொடுக்காமல், இரண்டு போலீஸ் கையை பிடித்துக்கொள்ள பல்லை பிடுங்கினால் எப்படி இருக்கும் நினைத்து பாருங்கள்.

எத்தனை பேர் பல்லை பிடுங்கியிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. பல்லை பிடுங்குவதாக தொடர் புகார்கள் எங்களுக்கு வந்துகொண்டிருக்கிறது.

போற போக்கை பார்த்தால், பல்லை பிடுங்குவதால் அம்பை இளைஞர்களுக்கு பெண் கொடுக்காத நிலை ஏற்பட்டுவிடும் போல் இருக்கிறது.

எனவே ஏஎஸ்பி மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து அவரை சிறையில் அடைக்க வேண்டும். இவருக்கு துணையாக இருந்த ராமலிங்கம், ஆபிரகாம் மற்றும் ராஜகுமாரி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மனித உரிமை ஆணையத்தில் புகார் தெரிவிக்க உள்ளோம், நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளோம்” என கூறினார்.

ஏஎஸ்பி பல்பீர் சிங் மீது தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களும் இவ்விவகாரத்தில் அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், தமிழக பாஜக தலைவருமான அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாட்டில் அடிக்கடி நடக்கும் காவல் நிலைய மரணங்களால், பொதுமக்கள், காவல்துறை மீது நம்பிக்கை இழந்து வரும் நிலையில், இது போன்ற மனிதத் தன்மையற்ற தாக்குதல்கள் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தும்.

உடனடியாக திமுக அரசு, தகுந்த விசாரணை நடத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும், குற்றம் செய்தவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கவும், மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, காவல் துறைக்கு அறிவுறுத்தவும் வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ், “விசாரணை என்ற பெயரில் பல்வீர்சிங் அரங்கேற்றியுள்ள கொடுமைகள் மன்னிக்க முடியாதவை. மனநல பாதிப்புக்குள்ளானவர்கள் மட்டுமே இத்தகைய செயல்களில் ஈடுபடுவர். பல்வீர்சிங் போன்ற மனநிலை கொண்டவர்கள் காவல்துறை உயர்பதவிகளில் இருந்தால் மக்களுக்கு பாதுகாப்பு கிடைக்காது.

உச்சநீதிமன்றம் வகுத்த விதிகளையும், மனிதநேயத்தையும் மதிக்காத காவல் உதவி கண்காணிப்பாளர் பல்வீர்சிங் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட வேண்டும். அவர் மீது உடனடியாக வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி சேரன்மகாதேவி சார் ஆட்சியர், முகமது சபீர் ஆலத்துக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

இந்தசூழலில் ஏஎஸ்பி பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கான நடவடிக்கையை தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் எடுத்துள்ளார்.

புகாருக்கு உள்ளான ஏஎஸ்பி பல்வீர் சிங் 2020 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். ஹரியானாவைச் சேர்ந்த இவர் மும்பை ஐஐடியில் பி.இ.பட்டம் பெற்றவர். அக்டோபர் 15, 2022 அன்றுதான் அம்பாசமுத்திர ஏஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். நியமனம் செய்யப்பட்ட 5 மாதங்களில் இதுபோன்று அவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்துள்ளன.

பிரியா

எத்தனை நாட்களுக்கு மழை? வானிலை மையம் தகவல்!

திருச்சி தாக்குதல்: திமுகவினருக்கு ஜாமீன்!

+1
0
+1
2
+1
1
+1
5
+1
2
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *