பல் பிடுங்கிய ஏஎஸ்பி: அமுதா ஐஏஎஸ் நாளை விசாரணை!

தமிழகம்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களின் பற்களை பிடுங்கிய ஏஎஸ்பி பல்வீர்சிங் மற்றும் காவல் துறையினர் துன்புறுத்தியதாக சமூக ஊடகங்களில் வெளியான புகார்கள் தொடர்பாக, சார் ஆட்சியர் விசாரணை மேற்கொள்ள கடந்த மார்ச் 26 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவரால் உத்தரவிடப்பட்டது.

இதுகுறித்து சார் ஆட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்று பாதிக்கப்பட்ட பத்திற்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

தொடர்ந்து அம்பாசமுத்திரம், வி.கே புரம், கல்லிடைக்குறிச்சி காவல் நிலையங்களிலும் இருக்கும் சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் காவல் நிலையங்களில் மார்ச் 11, 12 ஆகிய தேதிகளில் மட்டும் பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லையென்று தெரிய வந்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் பரிந்துரைப்படி உயர்நிலை அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, விசாரணை அதிகாரியாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா நியமனம் செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து இன்று(ஏப்ரல் 9)சென்னையிலிருந்து நெல்லை சென்ற அவர் வண்ணாரபேட்டையில் உள்ள விருந்தினர் மாளிகையை அடைந்தார். அங்கு அவரை நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் ஆகியோர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.

தொடர்ந்து ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்ட முதல் கட்ட விசாரணை அறிக்கை அமுதா ஐஏஎஸ்-யிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் அவர் நாளை(ஏப்ரல் 10) விசாரணையை தொடங்கவுள்ளார். இந்த விசாரணைக்கு பின் பல்வீர் சிங் மீது கிரிமினல் வழக்கு பாயுமா? முதல் தகவல் அறிக்கை பதியப்படுமா என்ற எதிர்பார்ப்பு அம்பாசமுத்திரம் மக்களிடையே எழுந்துள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

மோடிக்குத் திரண்ட கூட்டம்: டெல்லிக்கு போன ரிப்போர்ட்!

“மோடி எங்கள் சொந்தக்காரர்”: பெள்ளி நெகிழ்ச்சி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *