அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஸ்டாராக இருப்பதால் விளையாட்டுத் துறையும் ஸ்டாராக வளர்ந்துள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சீன நாட்டின் ஹாங்சூவில் நடைபெற்ற 19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இன்று (அக்டோபர் 11)சென்னை ஆர். ஏ.புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 20 பேருக்கு, ரூ. 9.4 கோடி ரொக்க பரிசு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் ராஜகண்ணப்பன், தயாநிதி மாறன் எம்.பி.உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விளையாட்டு வீரர்களுக்கு பரிசுத் தொகை வழங்கி பேசிய முதல்வர் ஸ்டாலின், “
ஆசிய விளையாட்டு போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் அதிக பதக்கங்களைப் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்தியா மொத்தமாக வென்ற 107 பதக்கங்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் மட்டும் 28 பதக்கங்களைப் பெற்றுள்ளனர். இந்திய அளவில் பார்த்தால் நமது மாநிலம் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளது.
இந்தப் பாராட்டு உங்களுக்கும் உங்களது வெற்றிக்கும் மட்டுமல்ல. நீங்கள் இன்னும் பல வெற்றிகளைப் பெற வேண்டும் என்று ஊக்கமளிக்கவும் – உங்களைப் போல இன்னும் பல வீர்கள் உருவாக அடித்தளமாக அமைய வேண்டும் என்பதற்காகவும்தான்.
எந்தவொரு அரசாக இருந்தாலும், ஏதாவது ஒரு குறிப்பிட்ட ஒரு சில துறைகளில் மட்டும் அதிக கவனம் செலுத்தும். ஆனால் திராவிட மாடல் அரசானது அனைத்துத் துறைகளிலும் அதிகக் கவனம் செலுத்துவதன் மூலமாக, அனைத்துத் துறைகளையும் ஒருசேர வளர்த்து வந்து கொண்டிருக்கிறது.
குறிப்பாக சில துறைகள் ஸ்டார் துறைகளாக வளர்ந்து வருகின்றன. அதில் விளையாட்டுத் துறையும் ஒன்று. இந்தத் துறையின் அமைச்சர் ஒரு ஸ்டாராக இருப்பதால், இந்த துறையும் ஸ்டார் துறையாக வளர்ந்துவிட்டது.
விளையாட்டுத் துறையின் மூலமாக, விளையாட்டு வீரர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த இளைய சமுதாயமும் எழுச்சி பெற்று வருகிறது. நாள்தோறும் தமிழ்நாடு முழுவதும் ஏராளமான விளையாட்டுத் துறை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன.
அதிலும், அமைச்சர் உதயநிதி நடந்து அல்ல, ஓடிக் கொண்டே இருக்கிறார்.
அந்தத் துறையின் கேப்டனாக இருந்து, அனைத்து வகை விளையாட்டு வீரர்களையும் சாம்பியன்களாக ஆக்கிக் கொண்டு இருக்கிறார். கடந்த இரண்டரை ஆண்டுகளில் இந்த துறை உலகமே வியந்து பார்க்கும் பல்வேறு சாதனைகளைச் செய்துள்ளது.
அதில் மிக முக்கியமானது 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி. இனி யாரும் இப்படி நடத்த முடியாது என்று சொல்லத்தக்க வகையில் மிகக் குறுகிய காலத்தில் சிறப்பாக நடத்தி முடித்துக் காட்டினோம்.
அதேபோல் இந்த இரண்டு ஆண்டுகளில், பன்னாட்டு மற்றும் தேசிய அளவில் பதக்கங்கள் வென்று இந்தியாவிற்கும் மற்றும் தமிழ்நாட்டிற்கும் பெருமை தேடித் தந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 1,864 விளையாட்டு வீரர்களுக்கு மொத்தம் 52 கோடியே 82 லட்சம் ரூபாய் மதிப்பிலான உயரிய ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும் அவர், “’முதலமைச்சர் கோப்பை’ என்ற பெயரில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுப் பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மாவட்டம் மற்றும் மாநில அளவில் சிலம்பம், கபடி, கால்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட 15 வகையான போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன.
இதில், மாவட்ட மண்டல அளவில் இந்த ஆண்டு ஏறக்குறைய 3 லட்சத்து 71 ஆயிரம் வீரர்கள் பங்கேற்றனர். மண்டல அளவிலான போட்டிகளில் 27 ஆயிரத்து 54 வீரர்- வீராங்கனைகள் பங்கெடுத்தார்கள்.
இந்த முதலமைச்சர் கோப்பை போட்டிகளை நடத்துவதற்கு 50 கோடியே 86 லட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்தோம். இதில் பரிசுத் தொகை மட்டும் 28 கோடியே 30 லட்ச ரூபாய்.
மாநிலத்தில் விளையாட்டு மேம்பாட்டிற்காக பொதுமக்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இணைந்து ‘Tamil Nadu Champions Foundation’ என்கிற அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 13 முதல் ஜூன் 17 வரை ஸ்குவாஷ் உலகக் கோப்பையை வெற்றிகரமாக நடத்திக் காட்டினோம். இந்தப் போட்டியில் ஜப்பான், மலேசியா, ஹாங்காங், தென்னாப்பிரிக்கா, எகிப்து, ஆஸ்திரேலியா, கொலம்பியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த உலகின் முன்னணி ஸ்குவாஷ் வீரர்கள் கலந்து கொண்டனர்.
தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி 2023 நமது மாநிலத்தில் நடைபெற உள்ளது. விளையாட்டு உள்கட்டமைப்பில் அரசு அதிநவீன கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது. சென்னையில் விளையாட்டு நகரம் அமைக்கப்பட உள்ளது,
ஒலிம்பிக் மற்றும் சர்வதேச விளையாட்டுகளில் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக சென்னை, மதுரை, திருச்சி மற்றும் நீலகிரியில் ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்கப்படுகின்றன.
ஒவ்வொரு ஊராட்சியிலும் உள்ள கிராமங்களில் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ளது. சட்டமன்றத் தொகுதிகளில் சிறு விளையாட்டரங்கங்களை அரசு அமைத்து வருகிறது.
விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிப்பதைப் போலவே, விளையாட்டு மீதான ஆர்வத்தை அனைத்து மாணவ, மாணவியருக்கும் ஏற்படுத்த வேண்டும் என்று அமைச்சரையும், விளையாட்டுத் துறை அதிகாரிகளையும் கேட்டுக் கொள்கிறேன்.
‘அறிவை விரிவு செய்’ என்பதைப் போலவே, ‘உடலை உறுதி செய்’ என்பதும் நமது முன்னெடுப்பாக இருக்க வேண்டும். அறிவை விரிவு செய்ய பள்ளி கல்லூரி அளவில் ஏராளமான முன்னெடுப்புகளைச் செய்து வருகிறோம். அதேபோல் உடலை உறுதி செய்ய அதற்கான முன்னெடுப்புகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை செய்ய வேண்டும்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ள தமிழ்நாடு, முதலிடத்துக்கு முன்னேற வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை விளையாட்டுத் துறை மேற்கொள்ள வேண்டும்” என்றார் முதல்வர் ஸ்டாலின்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் ரத்து!
டிஜிட்டல் திண்ணை: பணத்தைப் பிடி… படம் பிடி! திமுகவை நோக்கி தீவிரமாகும் ED வேட்டை!