தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 17 அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரை வழங்கியுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று (அக்டோபர் 18) தாக்கல் செய்யப்பட்டது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி மக்கள் 2018-ஆம் ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி போராட்டம் நடத்தியபோது, காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.
தமிழக அரசானது, துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது.
நான்கு புத்தகங்களாக விசாரணை ஆணையம் அறிக்கை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டு சட்டமன்றத்தில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் இன்று வழங்கப்பட்டது.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் போது, தங்களது பொறுப்புகளை தட்டிக்கழித்ததாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த வெங்கடேஷ், தென் மண்டல ஐ.ஜி சைலேஷ்குமார் யாதவ், தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் உள்பட 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க விசாரணை ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரை வழங்கி உள்ளது.
போலீஸ்காரர் சுடலைக்கண்ணு மட்டும் 17 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரை அடியாள் போல காவல்துறை பயன்படுத்தியுள்ளனர் என்றும் போராட்டம் நடத்தியவர்கள் மீது பூங்காவில் மறைந்திருந்து போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
ஜெ. மரணம்: ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை பேரவையில் தாக்கல்!
எதிர்க்கட்சித் தலைவர் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட பதவி: சபாநாயகர் விளக்கம்!