ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை நீதியரசர் ஆறுமுகசாமி ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல்வரை நேரில் சந்தித்து வழங்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையத்தை அமைத்து 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
இதன்படி ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் என 157 க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியது ஆறுமுகசாமி ஆணையம்.
விசாரணை அனைத்தும் ஏப்ரல் மாதம் முடிவடைந்த நிலையில் விசாரணை அறிக்கை தயாரிக்கும் பணிகளில் ஆறுமுகசாமி ஆணையம் ஈடுபட்டு வந்தது.
ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவக்குழு, தனது அறிக்கையை கடந்த சில நாட்களுக்கு முன் ஒப்படைத்தது.
அந்த அறிக்கையில் ஜெயலலிதாவிற்கு வழங்கிய மருத்துவ சிகிச்சையில் எவ்வித சந்தேகமும் இல்லை என 7 பேர் கொண்ட எய்ம்ஸ் குழு அறிக்கை சமர்ப்பித்தது.
இறுதியாக எய்ம்ஸ் மருத்துவக்குழு அறிக்கை மற்றும் ஆணையம் மேற்கொண்ட விசாரணை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு முழுமையான இறுதி அறிக்கையை ஆணையம் தயார் செய்துள்ளது.
ஆணையத்துக்கு வழங்கப்பட்ட கால நீட்டிப்பு நாளையுடன் (ஆகஸ்ட் 24) முடிவடையவுள்ள நிலையில் இந்த அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்க ஆறுமுகசாமி ஆணையம் தமிழக அரசிடம் நேரம் கேட்டு கடிதம் எழுதி இருந்தது.
முதலமைச்சர் ஸ்டாலின் இன்று இரவு கோவை செல்லும் நிலையில், ஆணையத்தின் அறிக்கையை ஆகஸ்ட் 27ம் தேதி நீதியரசர் ஆறுமுகசாமி முதல்வரை நேரில் சந்தித்து வழங்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
- க.சீனிவாசன்
ஜெ. மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்திடம் அவகாசம் கேட்ட எய்ம்ஸ் மருத்துவக் குழு!