RK Suresh Returns to Chennai
துபாயில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் ஆர்.கே.சுரேஷை, விமான நிலையத்திலேயே வைத்து அதிகாரிகள் விசாரணை செய்துள்ளனர்.
சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு இயங்கிய ஆரூத்ரா கோல்டு நிறுவனம் 25-30% வரை வட்டி வழங்குவதாக கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டது. இதனை நம்பி அதில் முதலீடு செய்த பொதுமக்களின் பணம் பறிபோனது.
சுமார் 1 லட்சம் முதலீட்டார்களிடம் இருந்து ரூபாய் 2,438 கோடி வரை அந்நிறுவனம் மோசடி செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த மோசடியில் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் தமிழக பாஜகவின் ஓபிசி பிரிவு துணை தலைவரான ஆர்.கே.சுரேஷுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. மேலும் இந்த வழக்கில் இருந்து தப்பிக்க அவர் துபாய்க்கு தப்பி சென்றதாகவும் கூறப்பட்டது.
இதற்கிடையில் இந்த சம்மனை திரும்ப பெற வேண்டும் என ஆர்.கே.சுரேஷ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில் ஆரூத்ரா மோசடிக்கும், தனக்கும் சம்பந்தம் இல்லை என்றும் மனைவி, குழந்தைகளை கவனித்து கொள்வதற்காக துபாயில் இருப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது.
மேலும் தான் சென்னைக்கு வந்து விசாரணைக்கு ஆஜராகும் வரை தன்னை கைது செய்யக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆர்.கே.சுரேஷுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இந்த நிலையில் இன்று (டிசம்பர் 10) காலை துபாயில் இருந்து ஆர்.கே.சுரேஷ் சென்னை திரும்பினார்.
அவரை விமான நிலையத்திலேயே குடியுரிமை அதிகாரிகள் சுற்றி வளைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் ஆரூத்ரா வழக்கில் ஆஜர் ஆவதற்காக தான் துபாயில் இருந்து திரும்பி வந்தேன் என தெரிவித்து உள்ளார். சுரேஷ் அளித்த உறுதியின் பேரில் விமான நிலைய அதிகாரிகள் அவரை வீடு திரும்ப அனுமதி அளித்தனர்.
இதுதொடர்பாக நாளை மறுநாள் (டிசம்பர் 12) பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் அவர் நேரில் ஆஜர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் ஆர்.கே.சுரேஷை, குடியுரிமை அதிகாரிகள் சுற்றி வளைத்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
’தளபதி 68’: 10 நிமிட காட்சிக்கு இத்தனை கோடி ரூபாய் செலவா?
இந்தியா- தென் ஆப்பிரிக்கா முதல் டி20 போட்டி இன்று தொடக்கம்… மைதானம் யாருக்கு சாதகம்?
RK Suresh Returns to Chennai