சென்னை சங்கமம் தான் எங்க அடையாளம்… நெகிழும் கலைஞர்கள்!

Published On:

| By Selvam

பொங்கல் பண்டிகையை ஒட்டி சென்னைவாசிகள் பலரும் ஊருக்கு படையெடுத்துவிட்டனர். ஆனாலும், ‘சென்னை சங்கமம் – நம்ம ஊர் திருவிழா’ கலை நிகழ்ச்சியால் சென்னை நகரமே களைகட்டியுள்ளது.

பறையிசை, மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை என தமிழக பாரம்பரியக் கலைகளை மீட்டுருவாக்கம் செய்யும் வகையில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இருந்து சென்னை வந்த கலைஞர்கள் மேடைகளில் அரங்கேற்றம் செய்து வருகின்றனர்.

கடந்த ஜனவரி 13-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் சென்னை சங்கமம் திருவிழாவை தொடங்கி வைத்தார். ஜனவரி 14 முதல் 17 வரை சென்னையின் 18 இடங்களில் இந்த திருவிழாவானது நடைபெறுகிறது.

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ ஹாஸ்டல் முன்பு உள்ள பார்க்கில் சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சி குழுவினர் பயிற்சி எடுத்து வந்தனர்.

நாம் அந்த இடத்திற்கு செல்லும் போதே ஒரு புது வைப் நம்மை தொற்றிக்கொண்டது. நம்மை அறியாமலேயே கால்களும், தலையும் ஆட தொடங்கியது. அந்த இடமே பயிற்சி எடுக்கும் இடம் போல் இல்லாமல் கலை அரங்கேற்ற நிகழ்ச்சி போலவே காட்சியளித்தது. பறையிசை, ஒயிலாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம் என கலைஞர்கள் அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தனர்.

அந்த இடமே ஆர்ப்பரிக்கும் அளவிற்கு பறை இசைத்துக்கொண்டிருந்த வேல்முருகனிடம் நாம் பேசினோம்…, “என்னை வேலு ஆசான்னு தான் எல்லோரும் கூப்புடுவாங்க. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தான் என்னோட சொந்த ஊரு. சமர் கலைக்குழு நடத்திட்டு வர்றேன்.

சென்னை சங்கமம்னா எனக்கு என்னன்னே தெரியாது. 2007-ஆம் ஆண்டு தான் கனிமொழி மேடம் எங்களை இங்க வர வச்சாங்க. அப்போது எனக்கு நிறைய அனுபவம் கிடைச்சது. இதனால எனக்கு அடுத்தடுத்து நிறைய வாய்ப்பு கிடைச்சது.

சீனா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, துபாய், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு பறை அடிக்க போயிருக்கேன். இதுக்கெல்லாம் ஒரே காரணம் சென்னை சங்கமம் தான். இது தான் எனக்கு அடையாளம் கொடுத்தது.

இப்போம் நான் படத்துலயும் நடிச்சுக்கிட்டு இருக்கேன். தர்மதுரை, கும்கி, சூரரைப்போற்று, பேட்ட, அண்ணாத்த, லால் சலாம், குட்டிப்புலி போன்ற படங்கள்ளயும் நடிச்சிருக்கேன்” என்று மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.

புதுவை தாய்மண் கலைக்குழுவைச் சேர்ந்த அஜித்குமார் பேசும்போது, “எங்க குழுவுல இருக்குற எல்லோருமே படிச்சிக்கிட்டு இருக்கிற கலைஞர்கள்.

தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகம், பொய்க்கால் குதிரை, சாட்டை குச்சி, மூங்கில் பாதம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்தி வர்றோம். சென்னை சங்கமம் குழுவில் எங்களுக்கு வாய்ப்பு கிடைச்சது ரொம்பவே மகிழ்ச்சியா இருக்குது” என்றார்.

பெண்களுக்கு சிலம்பம் பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்த நெல்லை சிங்கப்பெண்கள் கலைக்கூடத்தின் பயிற்சியாளர் சையது அலியிடம் பேசினோம்… “எல்லா தற்காப்பு கலைக்கும் அடிப்படை சிலம்பு தான். கராத்தே, குங்ஃபூ போன்ற எல்லா கலைகளையும் சிலம்பு கலையை அடிப்படையாக வைத்து தான் உருவானது. ஆனால், இன்றைக்கு சிலம்பு கலையை எல்லோரும் மறந்துட்டாங்க.

பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான கலை சிலம்பம் தான். இந்தக் கலையை கற்கும் போது அவங்களுக்கு மன தைரியம் கிடைக்கும். ஒரு கம்பை எடுத்து சுற்றும்போது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஆக்டிவாக இருக்கும். இது பெண்கள் மிகவும் ஃபிட்டாக இருப்பதற்கு உதவும். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்” என்றார்.

மறந்துபோன நமது பண்பாட்டையும் கலை வடிவங்களையும் மீட்டெடுக்கும் இந்த அற்புத முயற்சிக்கு கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

சந்திப்பு: வணங்காமுடி

தொகுப்பு: செல்வம்

மாணவிக்கு பாலியல் தொல்லை… சென்னை ஐஐடி விளக்கம்!

ரூ.100 கோடி: மெஸ்ஸியை இந்தியா கொண்டு வர… பின்னணி என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel