ஜனநாயகப் பட்டியும் காவிரிக் கரை ஆடுகளும்! – ஸ்ரீராம் சர்மா

Published On:

| By Balaji

ஸ்ரீராம் சர்மா

கசாப்புக் கடையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட ஆடுகளைக் கண்டு ‘அவர்கள்’ மகிழ்ந்தார்கள்.

அந்த ஆடுகளையெல்லாம் பத்திரமாக வழி நடத்திச் செல்ல வேண்டுமே என்னும் ‘அக்கறை’யும் கொண்டார்கள்.

தங்கள் சக்திக்கேற்றவாறு சிறிதும் பெரிதுமாகப் ‘பட்டி’களை உண்டாக்கி, அதில் ஆடுகளை விரட்டிவந்து அடைத்துக்கொண்டார்கள்.

ஆரம்பத்தில் ஆடுகளுக்கு ‘தேசியப் புல்’ தின்னக் கொடுக்கப்பட்டது. சில பட்டிகளில் ‘பிராந்தியப் புல்’ தரப்பட்டது.

காலப் போக்கில் சலித்த ஆடுகள் தனியாக ஓரங்கட்டப்பட்டு, ‘புதுப் பட்டி’ அமைக்கப்பட்டு ‘மொழிப் புல்’ அளிக்கப்பட்டது.

போகப் போக, ‘சாதிப் புல்’, ‘வர்க்கப் புல்’, ‘கலகப் புல்’ என விதம் விதமாக சப்ளை செய்யப்பட்டது.

சரி, இப்படியெல்லாம் பட்டி கட்டி வளர்ப்பதனால் யாருக்கு என்ன லாபம் என்று அப்பாவியாகக் கேட்பீர்களேயானால் நீங்கள்தான் மிகச் சரியான இந்திய ஆடு.

சரி, இந்தப் பட்டிக்காரர்கள் ஆடுகளின் மீது ஏன் இத்தனை அக்கறை கொண்டு மறுகுகிறார்கள் என்பதைப் பார்ப்போம்…

அரசப் பட்டி ஒழிக்கப்பட்டு, அடிமைப் பட்டியும் விலக்கப்பட்ட பின், ஜனநாயகப் பட்டி அமைக்கப்பட்டது. அதில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ‘சந்தை கூடும்’ என்று ஊர்ப் பெரியவர்களால் நிர்ணயிக்கப்பட்டது.

ஆகா, இதற்குத்தானே காத்திருந்தோம் என்பது போல ‘அவர்கள்’ அடித்துப் பிடித்துத் தங்கள் சக்திக்கேற்றாற்போல் தனித்தனியே ‘பட்டி’ அமைத்துக்கொண்டார்கள்.

பட்டியின் ‘உரிமையாளர்களாகத்’ தங்களையும், பட்டியின் ‘வழி உரிமை’ தங்கள் குடும்பத்துக்கே என்றும் நடைமுறைப்படுத்திக்கொண்டார்கள்.

நான்காண்டுகளுக்கு ஒருமுறை பட்டிகள் எல்லாம் சுத்தம் செய்யப்பட்டு, ஆடுகள் குளிப்பாட்டப்பட்டு, மேளதாளத்தோடு வீதிகளில் அவிழ்த்து விடப்படும்.

“கச்சிதமாகக் காரியம் முடித்துத் திரும்பிவந்தால் அடுத்த ஐந்தாண்டுகளுக்குச் சிறப்புப் புல் உண்டு…” என்று ஆசை காட்டப்பட்டு, கீரைத் தோட்டத்தின் வழியே அனுப்பி வைக்கப்படும்.

விவரமில்லாத ஆடுகளும் ஓடோடிப் போய் “இப்போது இருக்கும் பட்டிதான் எங்களுக்குப் பாதுகாப்பான பட்டி. இப்போது இருப்பவரே ஆகச் சிறந்த மேய்ப்பர். எங்கள் உரிமையாளர் கடவுளை நிகர்த்தவர்” என்றெல்லாம் ஊர்ப் பெரியவரிடம் வாக்களிக்கும்.

ஏமாற்றும் உரிமையாளர்களுக்கு நடுவே நல்ல மேய்ப்பர்களும் இல்லாமல் இல்லை. மேலும், ஆரோக்கியமான பட்டிகள் அவர்களுடையது. ஆனால், போதுமான ‘தாது உப்புக் கட்டிகள்’ அவர்களிடம் இருப்பதில்லை.

அதனால், உண்மையான மேய்ப்பர்கள் எல்லாம் ஆடுகளாலேயே புறந்தள்ளப்படுவர். வலுத்த மேய்ப்பர்கள் மட்டுமே கம்பீரமாகக் கோலூன்றி நிற்பர்.

முடிவில், ஒவ்வொருவரிடமும் இருக்கும் ஆடுகள் ஊர்ப் பெரியவரால் கணக்கிடப்படும்.

ஆடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்றாற்போல் அவற்றுக்குப் புல்லறுக்கத் தேவையான ‘ஏரியா’ அந்தந்தப் பட்டிகளின் ‘உரிமையாளர்களுக்குச்’ சட்டப்படி ஒதுக்கப்படுகிறது என்று அறிவிக்கப்படும்.

அதோடு அவரது ரோல் ஓவர். தன் கடமை முடிந்ததென, சுரணையே இல்லாமல் ஏசி ரூமுக்குத் திரும்பி, உயர்ந்த ஆடு என்னும் அந்தஸ்தோடு அடுத்த ஐந்தாண்டுகளுக்காக அவரும் காத்திருப்பார்.

அடுத்த கட்டமாக பட்டியின் உரிமையாளர்களுக்கும் மேய்ப்பர்களுக்கும் டீலிங் ஓடும்.

“எங்கள் கனத்த ஆடுகளுக்கு, செழித்த புல்லறுத்துக் கொடுக்க கடமைப்பட்டவர்கள் நாங்கள்…” என்று சொல்லி வளமான ‘ஏரியா’வை ஒதுக்கிக்கொள்வார்கள் மேய்ப்பர்கள்.

அதன் பின், புல் என்று இல்லை… எந்த ஆணியையும் பிடுங்க மாட்டார்கள்.

‘புல் அறுக்கிறேன் பேர்வழி’ என்று ‘புதையலைத்’ தேடி ஊரெல்லாம் நோண்டிக்கொண்டிருப்பார்கள்.

கிடைக்கும் புதையலை எல்லாம் உரிமையாளர்களோடு பங்கிட்டுக்கொண்டு கொழுப்பார்கள்.

இதுதான் முன் கதை.

இப்போது புரிகிறதா ‘அவர்கள்’ எதற்காகப் ‘பட்டி’ கட்டினார்கள் என்று? அந்தப் பட்டியை ஏன் பார்த்துப் பார்த்துப் பராமரிக்கிறார்கள் என்று இப்போது புரிந்துவிட்டதா?

இந்தப் புதையல் வேட்டைக்கு முதல் என்று ஏதும் போடத் தேவையில்லை. ஆடுகளை ஏமாற்றி, அடக்கி வைத்திருக்கத் தெரிந்திருந்தால் போதும். அவ்வளவே.

ஆறு மாத காலம் மைக்ரோ லெவலில் திட்டமிட்ட உழைப்பு. அதற்குப் பலனாக நாலரை வருடம் புதையல் வருமானம், அதிகாரம் ப்ளஸ் சுகம்! போதாதா?

உரிமையாளர்களும் மேய்ப்பர்களும் சுகமாய் சுற்றித் திரிய…

பட்டிகள் எல்லாம் பட்டினியில் வாடும். ஏமாந்த ஆடுகள் அடித்தொண்டை வறண்டு கத்தும். பசியோடு முகம்பார்க்கும் குட்டிகளை நக்கிக்கொடுத்தே சமாதானப்படுத்தி வளர்க்கும்.

இதைக் காணப் பொறுக்காமல், ஆடுகளுக்குப் புல்லறுக்கவென்றே பிறந்த சில ஏமாந்த மேய்ப்பர்கள், ஆடுகள் தங்களைப் புறக்கணித்ததை மனதில் கொள்ளாமல் தேடிப் போய் கொஞ்சம் புல்லறுத்துப் போடுவார்கள்.

அந்தச் சமயம், குற்றவுணர்ச்சியோடு ஆடுகள் தலை குனிந்தபடி குட்டிகளோடு அசை போடுவதைக் காணப் பரிதாபமாக இருக்கும்.

தங்கள் மேல் கொஞ்சமும் அக்கறையில்லாமல் புதையல் தேடி அலையும் சுயநல உரிமையாளர்களை எண்ணி இளைத்த ஆடுகள் ஈனக்குரலில் சாபமிட்டுத் தீர்க்கும்.

பட்டி எங்கிலும் சுகாதாரம் கெட்டுப் புழுக்கை வீச்சம் எடுக்கும்போதெல்லாம் தங்களைத் தாங்களே நொந்துகொள்ளும்.

பட்டிகளை உடைத்துக்கொண்டு வெளியேறும் சக்தி படைத்த ஆடுகள் மட்டும் தனியே இனம் கண்டறியப்பட்டு ‘சிறப்பாக’க் கவனிக்கப்படும். மற்ற ஆடுகளைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பும் அவற்றிடமே ஒப்படைக்கப்படும்.

“சும்மா கத்திக்கொண்டிருக்காதீர்கள். நம் மேய்ப்பர் மட்டும் இல்லையென்றால், கசாப்புக்காரன் நம்மையெல்லாம் ஓட்டிக்கொண்டு போய்விடுவான் புரிகிறதா? அந்தக் கசாப்புக் கடைக்காரன் வேறு யாருமில்லை. அதோ, அந்த எதிர்ப்பட்டிக்காரன்தான்…” என்று சக ஆடுகளாலேயே அதட்டப்பட, அப்பாவி ஆடுகள் வாய் பொத்திக்கொள்ளும்.

எதிர்த்துக் கேள்வி கேட்கும் ஆடுகளின் நாவில் தவறாமல் முள் தைக்கப்படும். ஆடுகளுக்காக யாரும் பரிந்து பேசினால்… “ஓஹோ, உனக்கு ஆறறிவோ…?” என்று விசாரித்தபடியே சட்டத்தின் அருமை அவர்களுக்குப் புரிய வைக்கப்படும். சில சமயம், ஆடுகளை விட்டே கல்லெறிய வைக்கும் வைபவமும் அரங்கேற்றிக் காட்டப்படும்.

உரிமையாளர்களுக்கு அல்லது மேய்ப்பர்களுக்கு இடையிலான போராட்டங்களின்போது சில சமயம் அப்பாவி ஆடுகள் பலி கொடுக்கப்படும்.

அந்த ‘தியாக’ ஆடுகளுக்குத் தக்க மரியாதை செய்து காட்டுவதன் மூலம் அடுத்த வரிசை ஆடுகள் தயார்படுத்தப் படும்.

நொந்து கிடக்கும் ஆடுகளை மேலும் வெறுப்பேற்றும்விதமாக, தொலைக்காட்சிகளில் “எந்தப் பட்டி, ஏமாந்த பட்டி” என்றும், “எந்த மேய்ப்பர் மோசமான மேய்ப்பர்” என்றும் ஒரு நாளைப் போல விவாதம் செய்து காட்டப்படும்.

நான்காண்டுகள் முடிந்தானதும் பட்டிகளுக்கு புது வண்ணம் அடிக்க வேண்டுமே என்னும் கரிசனத்தோடு மேய்ப்பர்கள் வருவார்கள். வரும்போதே அன்று விளைந்த ‘கீரைக் கட்டுகளோடு’ வருவார்கள்.

ஏதோ வந்த வரைக்கும் லாபம் என்று ஆடுகள் இளித்துக்கொண்டே வாலாட்டும்.

கீரைக் கட்டுகள் வாரியிறைக்கப்படும்.

அவ்வளவுதான், நான்காண்டு கால துன்பங்களை எல்லாம் சடுதியில் மறந்து அடித்துப் பிடித்து முண்டியடிக்கும் ஆடுகள் கீரைக் கட்டுகளை அள்ளிக்கொண்டு ‘தண்ணித் துறையை’ நோக்கி ஓட்டமாக ஓடும்.

திரும்பிவரும் வழியெல்லாம்… “அந்தப் பட்டி மட்டும் யோக்கியமா? இந்தப் பட்டி மட்டும் வாழ்ந்து விட்டதா?” என்று மேடை போட்டுக் காட்டுக் கூச்சல் போட்டுக்கொண்டிருப்பார்கள் மேய்ப்பர்கள்.

மேளம் அடிப்பதும், தாளம் கொட்டுவதும், டான்ஸ் ஆடுவதுமாகப் பட்டிகளின் சுற்றுப்புறத்தை எந்த நேரமும் சத்தமாகவே வைத்திருப்பார்கள்.

அதாவது ஆடுகள் சொந்தமாக யோசித்துவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருப்பார்கள். ஆடுகளின் கவனத்தை திசை திருப்பியபடியே இருப்பார்கள்.

ஊர்ப் பெரியவர் நிர்ணயிக்கும் ஒரு சுப முகூர்த்த நன்நாளில், வழக்கம்போல, கனகச்சிதமாகத் திட்டமிடப்பட்டு, பளிச்சென்று குளிப்பாட்டி, அலங்கரிக்கப்பட்ட ஆடுகள் அவிழ்த்து விடப்படும்.

அகத்திக் கீரையை அசைபோட்டபடியே வரிசையில் நிற்கும் ஆடுகள் அடுத்த ஐந்து வருடப் ‘புழுக்கை வீச்சத்துக்கு’ எழுதிக் கொடுத்துவிட்டுத் திரும்பி நடக்கும்.

இதுதான் ஜனநாயகப் பட்டியின் சுருக்கமான ஒரிஜினல் வரலாறு.

இதை மாற்றிவிட முடியாதா என்று ஏங்குபவர்கள் எல்லாம் காயடிக்கப்படுவார்கள். இதற்கு முலாம் பூசி, முளைப்பாரி எடுத்துத் துதிபாடுபவர்கள் எல்லாம் மாமணிகளாகவும், பூஷண்களாகவும் உலவிவர ஆசீர்வதிக்கப்படுவார்கள்.

அசைபோடும் ஆடுகளுக்குச் சுகமான பாட்டுப் பாடிக் கொடு. கிளிக் கதைகள் சொல். அவற்றை மந்த நிலையிலேயே வைத்திரு. உன் சேவைக்கு உண்டான சம்பாவனையை உரிமையோடு பெற்றுக்கொள்.

அரும்பாடுபட்டு வளர்த்துவந்த எங்கள் பட்டி வியாபாரத்தை உன் கலகக் குரலால் கெடுக்கப் பார்க்காதே என்று முறைத்துச் சொல்வார்கள்.

ஆம்… மேய்ப்பர்களின் நலன் விரும்பியாக இருக்கும்வரை பிழைத்துக்கொள்ளலாம். ஆடுகளைப் பற்றிச் சிந்திக்கத் தலைப்படுவீர்களாயின் ஆப்புதான்.

இப்போது புதுப்புதுப் பட்டிகள் திறக்கப்படுகின்றன. புதுப்புது வகைப் புற்கள் எல்லாம் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

அவை இயற்கைப் புற்களா, செயற்கைப் புற்களா என்று நின்று அவதானித்து உண்ணும் அவகாசம் அவற்றுக்கு மறுக்கப்படுகின்றன.

காலம் காலமாக ஏமாற்றங்களால் அழுத்தப்பட்டு ஆவேசத்தில் இருக்கும் ஆடுகளோ, கொடுப்பதையெல்லாம் தின்னத் தலைப்படுகின்றன.

காலப்போக்கில் அவையும் அலேக்காகத் தூக்கப்படும்.

அதற்கான நியாயங்கள் எல்லாம் ‘அவர்கள்’ அளவில் பேசித் தீர்த்துக்கொள்ளப்படும்.

இந்தக் கொடூரம் என்று நிற்கும்? உண்மையான விடுதலை எப்போது வாய்க்கும்?

உயிரும் சுரணையும் இருக்கும்போதே ஆடுகளின் தோலை உரிக்கத் தலைப்படுபவர்களே இனியாவது கொஞ்சம் கருணை காட்டுங்கள்.

ஆடுகள் உங்களைப் போலப் புதையலைத் தேடி அலைவது இல்லை. ஆடுகள் மிக மிக எளிமையானவை.

**இலை, தழை தாண்டி ஆடு என்ன கேட்டுவிடப் போகிறது? குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கேட்டு நிற்கும்.**

**அதைக்கூடக் கொடுக்க மாட்டீர்களா?**

உங்கள் பசப்பு ஆட்டத்தை எப்போது முடித்துக்கொள்ளப் போகிறீர்கள்?

வாழப் பிறந்த எங்களை யார் யாருக்கோ விலை பேசி விற்க முனைகிறீர்களே… அந்த அசிங்க குணத்தை எப்போது மாற்றிக்கொள்ளப் போகிறீர்கள்?

மக்களின் மனநிலை இன்று காய்ந்து சருகாகி முறுக்கேறியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

ஒரு ‘வலுவான தீக்குச்சி’ தன் வேலையைச் சரியாகச் செய்துவிடுமானால், அடுத்த கணம் சகலமும் பொசுக்கப்பட்டுவிடும் என்பதை உணருங்கள்.

பட்டினியால் புடைத்திருக்கும் எங்கள் விலா எலும்புகளின் மேல் தேரோட்டிக்கொண்டு போவதை நிறுத்துங்கள்.

இன்றைய இளைய தலைமுறை ‘ஆடுகள்’ என்ற நிலையிலிருந்து பரிணாமம் அடைந்து ‘ஜல்லிக்கட்டு காளைகளாக’ உருமாறி நிற்கிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

ஜனநாயகம் எக்கேடு கெட்டாவது போகட்டும். எங்களைத் தன்மானத்தோடு வாழவிடுங்கள். தயவுசெய்து எங்களையும் ஓர் உயிராக மதியுங்கள்.

எனதொரு புதுக் கவிதையோடு முடிக்கிறேன்.

**மூணு பைசாவுக்கு**

**அஞ்சு மாங்கா பிஞ்சு!**

**சித்ரா பௌர்ணமியில்**

**கீரன் சொற்பொழிவு!**

**கோடை விடுமுறையில்**

**சைக்கிள் ரிம்மின்**

**“டக்கர, டக்கர…”**

**தீபாவளி கவுன்ட் டவுன்**

**மழை பார்த்தல்**

**போலீஸ் பயம்**

**மாடி வீட்டு சுதாவின்**

**கன்னம் பூசிய வெட்கம்**

**காத்தாடி வெறீத்தல்**

**அப்பாவின் கோபம்**

**அம்மாவின்**

**சமையலறைப் பாடல்**

**தூக்கில் தொங்கிய நண்பனை**

**உயிரோடு இறக்கி**

**பெசன்ட் நகர்**

**கமலாக்கா குடிசையில்**

**அமரவைத்து அடித்த**

**சுண்டக்கஞ்சி**

**மனைவியின் பிரசவ அலறல்**

**குழந்தைகளின் மூத்திர வாசனை**

**மேடைகள்**

**பொன்னாடைகள்**

**கடன் பாக்கி**

**இன்னமும் வசூலாக வேண்டியது**

**இதோ என்னை மோதிய**

**காரின் கலர்… **

**இன்னும் என்னென்னெமோ**

**இருக்கத்தான் இருக்கிறது**

**இன்னும்…**

**த்தா…**

**யாரைக் கேட்டு**

**சங்கூதிப் போகிறான்**

**எனக்கு முன்னே?**

(**கட்டுரையாளர் குறிப்பு: ஸ்ரீராம் சர்மா** திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன். எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994இலேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டு கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார் ஸ்ரீராம் சர்மா. கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: vesriramsharma@gmail.com)�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share