தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களுக்கான ஜாக்டோ ஜியோ அமைப்பு இன்று (ஜனவரி 30) போராட்டம் நடத்தியது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும், ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம், ஊதிய முரண்பாடுகள் களைய வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 30ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்திருந்தனர்.
அதன்படி சென்னை முதல் குமரி வரை அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று (ஜனவரி 30) ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் டிபிஐ வளாகம் எதிரில் 150க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த 50க்கும் மேற்பட்ட போலீசார் அவர்களை கைது செய்து, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மண்டபத்துக்கு அழைத்து சென்று அடைத்து வைத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு அம்மாவட்டத்தைச் சேர்ந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் திவ்யா, ராஜாஜி, வேல்முருகன், லோகைய்யா, பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினர்.
சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை கைது செய்த போலீசார் தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.
“தமிழக அரசே, மாநில அரசே எங்களது கோரிக்கைகளை நிறைவேற்று” என்று கோஷம் எழுப்பி தஞ்சாவூர் ஆத்துப்பாலம் பகுதியில் ஜாக்டோ அமைப்பைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை கைது செய்வதற்காக போலீசார் வாகனத்துடன் வந்த போது, ஊழியர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும் போராட்டக் காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து போலீசார் பேருந்தில் அழைத்துச் சென்றனர்.
கோவை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. திருநெல்வேலியில் அரசு சித்த மருத்துவமனைக்கு எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இன்று சாலை மறியல் போராட்டம் நடத்திய நிலையில், வரும் பிப்ரவரி 5 முதல் 9 வரை பாஜக, அதிமுக தவிர்த்து மற்ற அரசியல் கட்சித்தலைவர்களை சந்தித்து ஆதரவு கோருவது, பிப்ரவரி 10ல் மாவட்ட அளவில் வேலை நிறுத்த போராட்ட ஆயத்த மாநாடு, பிப்ரவரி 15ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம், பிப்ரவரி 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்துவதற்கு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
உலக பணக்காரப் பட்டியலில் பின்னுக்குத் தள்ளப்பட்ட எலான் மஸ்க்… இந்தியர்களின் நிலை என்ன?
முழுமையான பயன்பாட்டுக்கு வந்தது கிளாம்பாக்கம்… நடைமேடை விவரங்கள் உள்ளே!