முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு முன் ஜாமின் வழங்க கூடாது என சிபிஐ தரப்பில் கடும் வாதங்கள் வைக்கப்பட்ட நிலையில், வழக்கை நாளைக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டில் தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் உள்ள சிலைகள் காணாமல் போனதாக புகார்கள் எழுந்தன.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அமைக்கப்பட்டு அதன் டிஎஸ்பியாக காதர் பாட்ஷா நியமிக்கப்பட்டார்.
பின்னர் உச்ச நீதிமன்றம் உத்தரவின் பேரில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்குப் சிறப்பு அதிகாரியாக பொன். மாணிக்கவேல் நியமிக்கப்பட்ட நிலையில், அவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரணை அதிகாரியாக இருந்த காதர் பாட்ஷா மீதே பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அதற்காக காதர் பாட்ஷா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் ஜாமினில் வெளியில் வந்தார்.
அவர் பொன். மாணிக்கவேல் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு நீதிமன்றமும் சிபிஐக்கு உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் பொன்.மாணிக்கவேலுக்குச் சொந்தமான இடங்களில் கடந்த 10ஆம் தேதி சுமார் 7 மணி நேரம் சோதனை நடத்தி அவர் மீது 13 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது சிபிஐ.
இதனையடுத்து சிலை கடத்தல் வழக்கில் தன் மீது சிபிஐ பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன் ஜாமின் கோரி முன்னாள் ஜ.ஜி. பொன் மாணிக்கவேல் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு இன்று (ஆகஸ்ட் 28) விசாரணைக்கு வந்தது.
அப்போது சி.பி.ஐ. தரப்பில், “பொன். மாணிக்கவேலைக் கைது செய்து விசாரணை நடத்தினால் தான் சிலை கடத்தல் தொடர்பான உண்மைகள் வெளிவரும். சிலை கடத்தல் வழக்கில் காதர் பாட்ஷாவை பொய்யான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
யாரைக் காப்பாற்ற இவர் இவ்வாறு செயல்பட்டார் என்பதைக் கைது செய்து காவலில் எடுத்து விசாரித்தால் தான் சிலை கடத்தலில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியும். எனவே இவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது” என கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “பொன். மாணிக்கவேலுக்கும் இந்த சிலை கடத்தல் மன்னனாகப் பார்க்கப்பட்ட சுபாஷ் கபூருக்கு நேரடியாகத் தொடர்புகள் உள்ளதா? அதற்கான ஆவணங்கள் இருக்கிறதா? எனக் கேள்வி எழுப்பினார்.
அப்போது சீலிடப்பட்ட கவர் ஒன்றை நீதிபதியிடம் ஒப்படைத்து, அதில் போதிய விவரங்களும், போதிய முகாந்திரங்களும் உள்ளதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சீலிடப்பட்ட கவரை முழுமையாகப் படித்துவிட்டு நாளை விசாரணையைத் தொடரலாம் என நீதிபதி வழக்கை ஒத்திவைத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
விஜய்யின் ‘கோட்’… 3 மணி நேரம் ஓடும் படமா?
’இனி ரேஷன் கடைகளிலும் ஆவின் பொருட்கள்’: அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு!