ராமநாதபுரம் மீனவர்கள் இன்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்!

Published On:

| By indhu

இலங்கை கடற்படையை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப் படகு மீனவர்கள் இன்று (ஜூலை 2) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

மீனவர்கள் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஜூன் 30ஆம் தேதி 400க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில், 2,500க்கும் அதிகமான மீனவர்கள் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இரவில் அந்த பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்தனர். மேலும், பாம்பன், தங்கச்சிமடம், நம்புதாளை பகுதிகளைச் சேர்ந்த 4 நாட்டுப் படகுகளையும், அதிலிருந்த 25 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் தமிழக மீனவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மீனவர்கள் போராட்டம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 25 மீனவர்களையும், 4 நாட்டுப் படகுகளையும் விடுவிக்கக்கோரி நேற்று (ஜூலை 1) பாம்பன் கடலில் இறங்கி மீனவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பேரணியாக சென்று பேருந்து நிறுத்தம் முன்பு தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்பாட்டத்தில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களின் மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்கள் பங்கேற்றனர். அவர்களை காவல்துறை அதிகாரிகள் சமாதானம் செய்து ஆர்பாட்டத்தை முடித்து வைத்தனர்.

இந்நிலையில், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட நாட்டு படகு மீனவர்கள் இன்று (ஜூலை 2) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும், ஜூலை 5ஆம் தேதி சாலை மறியல் மற்றும் ரயில் மறியல் போராட்டத்திலும் நாட்டுப் படகு மீனவர்கள் ஈடுபட திட்டமிட்டு உள்ளனர்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பாலஸ்தீன கைதிகள் இஸ்ரேல் சிறைகளில் இரவு, பகலாக சித்ரவதை: மருத்துவர் வேதனை!

தென் கொரியாவின் பாடல்களைக் கேட்ட வட கொரியா இளைஞருக்கு மரண தண்டனை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel