ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் வழக்கை ஐஜி அந்தஸ்த்தில் உள்ள அதிகாரி விசாரிக்க வேண்டும் என்று புகார்தாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் விசாரணைக்கு அழைத்து செல்லப்படுபவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிபிசிஐடி டிஎஸ்பி சங்கர் தலைமையில் விசாரணை அதிகாரியான காவல் ஆய்வாளர் உலக ராணி விசாரணை நடத்தி வரும் நிலையில், அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் அருண்குமார் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையிலும் விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் புகார்தாரரான அருண்குமாரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் பெங்களூரில் இருப்பதால் ஆஜராகவில்லை.
அவருக்கு பதிலாக நேற்று (மே 5) அருண்குமாரின் தாய் தந்தை விசாரணைக்கு ஆஜராகினர். இருவரும் சிபிசிஐடி டிஎஸ்பியை நேரடியாக சந்தித்து ஏஎஸ்பியை கைது செய்யாமல் விசாரிப்பதால் எங்களுக்கு விசாரணை மீது நம்பிக்கை குறைந்து வருகிறது என அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
என்ன நடந்தது என்று விசாரணைக்கு சென்றவர்களுடன் சென்ற மக்கள் கண்காணிப்பகம் வழக்கறிஞர்கள் பாண்டியராஜன் மற்றும் மாடசாமியிடம் நாம் விசாரித்தோம்.

வழக்கறிஞர் பாண்டியராஜன் கூறுகையில், “புகார் கொடுத்த 30 நாட்களுக்கு பிறகு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. மே 1 ஆம் தேதி ஏஎஸ்பி பல்வீர்சிங் மற்றும் சிலர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. (குற்ற எண் 4/2023).
புகார்தாரர் அருண்குமாருக்கு மே 5ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக சொல்லி கடந்த மே 3 ஆம் தேதி சம்மன் வந்தது.
அருண்குமார் பெங்களூரில் இருப்பதால் அவரது தாயார் ராஜேஸ்வரியிடம் சம்மன் கொடுக்கப்பட்டது. நேற்று (மே 5) காலை 11 மணிக்கு ராஜேஸ்வரி மற்றும் அவரது கணவர் கண்ணன் இருவரையும், மக்கள் கண்காணிப்பகம் வழக்கறிஞர் பாண்டியராஜனாகிய நானும், வழக்கறிஞர் மாடசாமியும் அழைத்து சென்றோம். அங்கு சிபிசிஐடி டிஎஸ்பி சங்கரை நேரில் சந்தித்து பேசினார் ராஜேஸ்வரி.
அவரிடம், ‘பெங்களூரில் என் மகன் வேலை பார்க்கிறார். அவரை மே 5 ஆம் தேதி விசாரணைக்கு வர சொல்லி மே 3ஆம் தேதி சம்மன் கொடுத்தனர். குறுகிய காலத்தில் எப்படி வரவைக்க முடியும். அதனால் நானே வந்தேன்’ என்று கூறினார்.
பல்வீர்சிங் ஏஎஸ்பியை கைது செய்யாமல் விசாரித்தால் விசாரணை சரியாக இருக்காது, நியாயம் கிடைக்காது. அதனால் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து, மனுவும் கொடுத்துவிட்டு வந்தார்” என்றார்.
மேலும் பாண்டியராஜன் கூறுகையில், “கொடநாடு வழக்கில் சுதாகர் ஐஜியை மேற்பார்வையாளராக நியமித்தது போல், இந்த வழக்கை விசாரிக்க ஐஜி அந்தஸ்தில் உள்ள ஐபிஎஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும்” என்றார்.
பல்வீர்சிங்கை கைது செய்ய ஐபிஎஸ் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், ஏஎஸ்பியை கைது செய்ய யோசித்து வருகிறது தமிழக காவல்துறை தலைமை என்கிறார்கள் காவல்துறை தரப்பில்.
வணங்காமுடி
”ஆளுநர் காலாவதியான மனிதர்”: வைகோ காட்டம்!
CSKvsMI: டிக்கெட் இல்லாமல் சேப்பாக்கில் குவிந்த ரசிகர்கள்!