மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் உயிரிழந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சி அருகே உள்ள எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 30-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
இதில் 9 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்ட அனைவரும் புதுச்சேரி, முண்டியம்பாக்கம் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, கள்ளச்சாராயத்தை தடுக்க தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தேடுதல் வேட்டை நடத்த வேண்டும் என்றும் வனப்பகுதியில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும், கள்ளச்சாராயத்திற்கான மூலப்பொருளான மெத்தனால் விற்பனையைக் கண்காணிக்கவும் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
டிஜிபியின் உத்தரவின் படி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சாராயம் விற்றதாக கைதான 89 பேரில் 22 பேர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். 67 பேர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கைதான சாராய வியாபாரிகளிடம் இருந்து 226 லிட்டர் சாராயம், 517 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கடலூர் மாவட்டத்தில் சாராய விற்பனை, மது கடத்தல் குறித்து 7418846100 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் 55 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாகை மாவட்டத்தில் 26 பேரும் மயிலாடுதுறையில் 31 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக கைதான 203 பேரில் 81 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 121 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கைதானவர்களிடம் இருந்து 5.901 லிட்டர் கள்ளச்சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே கள்ளச்சாராய விற்பனையில் முக்கிய குற்றவாளியான அமரன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் (அமரன்) அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் தலைமையில் 6 தனிப்படை அமைத்து தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர்.
புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு கள்ளச்சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் கடத்தி வருவதை தடுக்க விழுப்புரம் மாவட்ட எல்லையில் ஏற்கனவே உள்ள 10 சோதனைச் சாவடிகளுடன் கூடுதலாக 6 சோதனைச் சாவடிகள் அமைத்து காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே போன்று செங்கல்பட்டு மாவட்ட எல்லையில் கூடுதலாக 4 சோதனை சாவடி அமைக்கப்பட்டு வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மோனிஷா
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை உயர்வு!
கர்நாடக முதல்வர் பதவி: பிறந்தநாளில் ’ட்விஸ்ட்’ வைத்த டி.கே.சிவக்குமார்