ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல ரவுடிகள் கைதாகி வரும் நிலையில், ரவுடி மின்ட் ரமேஷிடம் இன்று (ஜூலை 22) தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட பின்னணியில் ஆற்காடு சுரேஷ் கொலை இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் அப்படி ஏதும் இல்லை என்று பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய தலைவர் ஆனந்தன் கூறினார்.
இந்த வழக்கில் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு தினம் தினம் புதிய தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய கடந்த ஆறு மாதங்களாக திட்டமிட்டு சுமார் பத்து கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்டல் நடந்திருக்கிறது. இதுகுறித்து மின்னம்பலத்தில் ஆபரேஷன் ஆம்ஸ்ட்ராங்…. பட்ஜெட் பத்து கோடி! பகீர் தகவல்கள்! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில் இக்கொலை வழக்கில் கைதான ரவுடி மின்ட் ரமேஷிடம் தனிப்படை போலீசார் இன்று (ஜூலை 22) விசாரணை நடத்தினர்.
பாஜக பிரமுகராக இருந்தவர் மின்ட் ரமேஷ். இவருடைய வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இவ்வழக்கில் இதுவரை 16 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இவர்களில் புன்னை பாலு, வழக்கறிஞர் ஹரிஹரன், அருள், ராமு ஆகிய 4 பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் இன்று அனுமதி கேட்டனர்.
இதற்காக பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 4 பேரும் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது அவர்கள் போலீஸ் காவலுக்கு செல்ல விருப்பமில்லை என கண்ணீருடன் நீதிபதியிடம் தெரிவித்திருக்கிறார்கள்.
ஏற்கனவே ரவுடி திருவேங்கடம் என்கவுண்ட்டர் செய்யப்பட்ட நிலையில், இவர்கள் போலீஸ் காவல் வேண்டாம், எங்களுக்கு தெரிந்த தகவலை ஏற்கனவே கூறிவிட்டதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.
இதனை ஏற்க மறுத்த எழும்பூர் நீதிமன்றம், கைதான ஹரிஹரனுக்கு 4 நாட்கள், மற்ற மூவருக்கு 3 நாட்கள் காவல் வழங்கி உத்தரவிட்டது.
முன்னதாக இவ்வழக்கில் கைதாகியுள்ள அதிமுகவில் இருந்த கடம்பத்தூர் ஊராட்சியை சேர்ந்த கவுன்சிலர் ஹரிதரனிடம் நடத்திய விசாரணையில், இந்த கொலைக்காக, சம்பவம் நடந்த 10 நாட்களுக்கு முன்னதாக 15 சிம்கள் மற்றும் புதுபோன்கள் வாங்கி கொடுக்கப்பட்டதாகவும், கொலைக்கு பின்னர் அவை அனைத்தையும் வாங்கி ஆற்றில் போட்டுவிட்டதாகவும் போலீசாரிடம் கூறியுள்ளார்.
விரைவில் முக்கிய குற்றவாளி ஒருவர் கைது செய்யப்படுவார் என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
நெல்லை, சேலம், கடலூர், ஆவடி ஆணையர்கள் மாற்றம்!
யோகி Vs மோடி…யோகியின் முதல்வர் பதவி பறிப்பா?… அகிலேஷ் கொடுத்த ஆஃபர்!