ஆம்ஸ்ட்ராங் கொலை… சம்பவ செந்தில் உயிருடன் பிடிபடுவாரா? துரத்தும் 3 டீம்கள்! ஷாக் ரிப்போர்ட்!

தமிழகம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 20-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிற நிலையில், இந்த கொலையை செயல்படுத்துவதற்கான சதித்திட்டத்தை ஒருங்கிணைத்த குழுவில் பிரபல ரவுடி சம்பவ செந்திலும் இடம் பெற்றிருக்கிறார் என்பதை அறிந்து அவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

ஆம்ஸ்ட்ராங்கை அவரது எதிரிகளில் யாரோ ஒருவர் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை, அவருடன் மோட்டிவ் கொண்ட எதிரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து திட்டம் வகுத்திருக்கிறார்கள் என்ற அடிப்படையில் போலீஸ் விசாரணை தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. கொலைத் திட்டத்தை ஒருங்கிணைத்தார் என்ற கோணத்தில்… சம்பவ செந்திலை கைது செய்வதற்கான தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர் போலீசார்.

ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸ் தேடி வருகிறது என்று ஊடகங்களில் ஒரு பக்கம் செய்திகள் வந்தாலும்… சென்னை மாநகர கமிஷனர் அருண் மட்டுமே அறிந்த அவருக்கு மிக மிக நம்பகமான போலீஸ் அதிகாரிகள் அடங்கிய இன்னொரு முக்கியமான குழு சம்பவ செந்திலை தேடும் பணியில் தீவிரமாக உள்ளது. அந்த அறிவிக்கப்படாத தனிப்படை சம்பவ செந்தில் பற்றி பல விவரங்களை திரட்டி இருக்கிறது.

சம்பவ செந்தில் கோவாவில் இருக்கிறார், மும்பையில் இருக்கிறார், பங்களாதேஷ் சென்று விட்டார் என்றெல்லாம் தகவல்கள் கசிந்து வருகின்றன. அவர் கடந்த ஒன்றரை மாதமாக தனது மொபைலை பயன்படுத்தவே இல்லை. ஆங்காங்கே வெவ்வேறு நண்பர்களின் போன் மூலமாக சென்னையில் தனக்கு இருக்கக்கூடிய ஆட்களுடன் ரகசியமாக பேசியிருக்கிறார். இதை சைபர் கிரைம் நிபுணர்கள் குழு கண்டுபிடித்துள்ளது

அதாவது குறிப்பிட்ட எண்ணில் இருந்து பேசினால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்பதை தாண்டி… ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து குறிப்பிட்ட காலத்தில் எத்தனை அழைப்புகள் எங்கெங்கே சென்றிருக்கின்றன என்ற டெக்னாலஜியின் அடிப்படையில் சம்பவ செந்திலின் இருப்பிடத்தை அறிய தீவிர முயற்சியெடுத்து வருகிறது சைபர் கிரைம் நிபுணர் படை.

கடந்த வாரம் பாஜக மாநில துணைத்தலைவரும் வழக்கறிஞருமான பால் கனகராஜை அழைத்து போலீசார் ஏழு மணி நேரம் விசாரித்தார்கள். அந்த விசாரணையின் போது, இந்த வழக்கில் தொடர்புடையவர்களின் வழக்கறிஞராக முன்பு வேறு வழக்குகளில் பால் கனகராஜ் இருந்ததைப் பற்றி விசாரிக்கப்பட்டிருக்கிறது. அந்த விசாரணையின் அடுத்த கட்டமாக சில நகர்வுகளைத் தொடங்கி இருக்கிறார்கள் தனிப்படை போலீசார்.

இதற்கிடையே சம்பவ செந்திலை, போலீசார் மட்டுமில்லாமல் இன்னும் இரண்டு குழுவினர் தேடிக் கொண்டிருக்கும் அதிர்ச்சி தகவலும் போலீசாருக்கு கிடைத்திருக்கிறது.

அதாவது சம்பவ செந்திலை கைது செய்வதற்காக சென்னை போலீஸ் ஆணையர் அருண் நியமித்த சிறப்பு படை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதேநேரம்… கொல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவு குழுவினரும் சம்பவ செந்திலை பழிவாங்குவதற்காக தீவிரமாக தேடி வருகிறார்கள் என்ற தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது.

அவர்கள் மட்டுமல்ல… சம்பவ செந்திலோடு இணைந்து இதுவரை செயல்பட்டு வந்த குழுவினரும் அவரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

போலீஸ் கையில் சம்பவ செந்தில் கிடைத்துவிட்டால் அடுத்தடுத்து தாங்களும் சிக்கிக் கொள்ள நேரிடும் என்பதால் போலீஸ் கையில் சம்பவ செந்தில் கிடைப்பதற்கு முன்பே அவரை பிடித்துவிட வேண்டும் என்கிற முனைப்பில் அவர்கள் இருக்கிறார்கள்.

இந்த இரு குழுவினருக்கும் கிடைத்து விடாமல் சம்பவ செந்திலை உயிரோடு கைது செய்ய வேண்டும் என்பதுதான் போலீசுக்கு இப்போது இருக்கிற சவால்.

டிஜிபி சங்கர் ஜிவால், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முன்னேற்றம் பற்றி தொடர்ந்து கமிஷனர் அருணிடம் கேட்டு வருகிறார். ’ வெகு விரைவில் சம்பவ செந்தில் கைது செய்யப்படுவார். அதன் பின் வழக்கில் பெரிய முன்னேற்றம் ஏற்படும்’ என்று கமிஷனர் தெரிவித்திருக்கிறார் என்கிறார்கள் வெள்ளை மாளிகை வட்டாரங்களில்.

விசாரணை வட்டாரங்களில் பேசியபோது, “உயிரைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால் போலீஸிடம் சரண்டர் ஆவதே சம்பவ செந்திலுக்கு இருக்கும் வாய்ப்பு. அவர் விரைவில் சரண்டர் ஆவார் அல்லது கைது செய்யப்படுவார் என்று நம்பிக்கை இருக்கிறது. அவர் கைது செய்யப்பட்ட பிறகு அரசியல் ரீதியான அதிர்வுகளை ஏற்படுத்தக் கூடிய வகையில் இன்னொரு முக்கியமான கைது ‘சம்பவம்’ இருக்கும்” என்கிறார்கள் சஸ்பென்ஸ் வைத்தபடி.

நமது நிருபர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அரசுப் பள்ளியில் தமிழ் கற்கும் வட மாநிலக் குழந்தைகள்!

டாப் 10 நியூஸ்: அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐ வழக்கு முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் வரை!

 

+1
0
+1
0
+1
0
+1
6
+1
0
+1
0
+1
0