பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், திரைப்பட இயக்குனர் நெல்சன் மனைவியிடம் தனிப்படை போலீசார் இன்று (ஆகஸ்ட் 20) விசாரணை மேற்கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூலை 5-ஆம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் முன்பு நின்றுகொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
அவரது கொலை வழக்கில் அதிமுக, பாஜக, காங்கிரஸ், தமாகா என அரசியல் கட்சி தலைவர்கள், பிரபல ரவுடிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடியை ஆந்திராவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குனர் நெல்சன் மனைவியிடம் தனிப்படை போலீசார் இன்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய ரவுடி சம்பவ செந்தில். இவரது கூட்டாளியான வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்தநிலையில், மொட்டை கிருஷ்ணனிடம் நெல்சனின் மனைவியும் வழக்கறிஞருமான மோனிஷா அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தெரிகிறது.
இதனையடுத்து மோனிஷாவிடம் தனிப்படை போலீசார் இன்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து நெல்சனிடமும் விசாரணை நடைபெறலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெல்சன் மனைவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் சம்பவம் திரையுல வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு தீர்ப்பு… மீண்டும் ஒத்திவைப்பு!
ஒரே ஓவரில் 39 ரன்கள்… யுவராஜ் சாதனையை முறியடித்த வீரர் யார்?