பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்குப்பழியாக கொலை நடக்கலாம் என்ற உளவுத்துறை எச்சரிக்கையின் பேரில் ரவுடி முருகேசன் இன்று (ஆகஸ்ட் 12) கைது செய்யப்பட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ஆம் தேதி சென்னை பெரம்பூரில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்து வரும் காவல்துறை இதுவரை 23 நபர்களைக் கைது செய்துள்ளது.
இதற்கிடையில், தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அவரது மனைவி பொற்கொடிக்கு சதீஷ் குமார் என்ற பெயரில் மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது.
அதில் பொற்கொடியையும், அவரது மகளையும் கொன்றுவிடுவேன் என்று சதீஷ் குமார் எழுதியிருந்தார். இதை தொடர்ந்து சென்னை படூரை சேர்ந்த சதீஷ் குமாரை காவல்துறை விசாரித்தது.
விசாரணையில், அந்த கடிதத்தை சதீஷ் குமார் எழுதவில்லை, அவரை இந்த வழக்கில் சிக்க வைக்க அருண் ராஜ் என்ற தனியார் பள்ளியின் தாளாளர் தான் எழுதியிருக்கிறார் என்பதை காவல்துறை கண்டுபிடித்தது. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 9-ஆம் தேதி அருண் ராஜை செம்பியம் காவல்துறை கைது செய்தது.
மேலும், இந்த வழக்கு சம்பந்தமாக, பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜை காவல்துறை ஆகஸ்ட் 9-ஆம் தேதி விசாரித்தது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள சம்பவம் செந்தில் மற்றும் நாகேந்திரன் ஆகியோருக்கு அவர் சில வழக்குகளில் ஏற்கனவே ஆஜராகியுள்ளதால், அவரை காவல்துறை விசாரித்தது. இவரை இதற்கு முன் ஆகஸ்ட் 4-ஆம் தேதியும் காவல்துறை ஒரு முறை விசாரித்தது.
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்குப்பழியாக கொலை நடக்கலாம் என்ற உளவுத்துறை எச்சரிக்கை விடுத்த நிலையில் ரவுடி முருகேசனை காவல்துறை இன்று கைது செய்தது. ஆம்ஸ்ட்ராங்கிற்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படும் ரவுடி முருகேசன் மீது பல்வேறு கொலை வழக்குகள் ஏற்கனவே பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரதமரை கொஞ்சி தேசத்தின் டார்லிங்கான நயிஷா… நிலச்சரிவில் தந்தை, சகோதரிகளை இழந்த சிறுமி!