பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷின் உறவினரான பெரம்பூரைச் சேர்ந்த பிரதீப்பை தனிப்படை போலீசார் இன்று (ஜூலை 26) கைது செய்தனர்.
கடந்த ஜூலை 5-ஆம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் முன்பு ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஆற்காடு சுரேஷ் தம்பி புன்னை பாலு உள்ளிட்ட 8 பேர் காவல் நிலையத்தில் சரண்டர் ஆனார்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அதிமுகவில் இருந்த மலர்க்கொடி, தமாகாவை சேர்ந்த ஹரிகரன், திருவள்ளூவர் மாவட்ட திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளர் குமரேசனின் மகன் சதீஷ், பாஜவை சேர்ந்த அஞ்சலை உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய ஆறு மாதங்களாக திட்டமிட்டு ரூ.10 கோடி அளவிற்கு நிதி திரட்டல் நடந்திருப்பதாக மின்னம்பலத்தில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்தநிலையில், பெரம்பூரை சேர்ந்த பிரதீப்பை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர்.
இவர் ஆற்காடு சுரேஷின் உறவினரும், கொலை செய்தவர்களுக்கு உதவியாகவும் இருந்ததாக தெரிகிறது. அதன்பேரில் அவரை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 18 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
TNPL-ல் விளையாட வாய்ப்பு மறுப்பு… கத்திப்பாரா மேம்பாலத்தில் இளைஞர் தற்கொலை!
அமைச்சர் பொன்முடியின் ரூ.14.21 கோடி சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை!