பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நேற்று (செப்டம்பர் 22) கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா இன்று (செப்டம்பர் 23) அதிகாலை என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
கடந்த ஜூலை 7-ஆம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் முன்பாக ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, அவரது மனைவி பொற்கொடி, பல்வேறு கட்சிகளை சார்ந்த முன்னாள் நிர்வாகிகள் உள்பட 27 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 25 பேர் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி சீசிங் ராஜாவை போலீசார் தேடி வந்தனர். இவர் ஆற்காடு சுரேஷ், மார்க்கெட் ரவி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக போலீசார் சந்தேகித்தனர். சீசிங் ராஜா தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வந்தார். இந்தநிலையில், அவரது கூட்டாளியான சஜித் தனிப்படை போலீசாரால் சில வாரங்களுக்கு முன்பாக கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சீசிங் ராஜா ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆந்திரா விரைந்த தனிப்படை போலீசார், கடப்பாவில் வைத்து சீசிங் ராஜாவை நேற்று கைது செய்தனர். தொடர்ந்து நேற்று இரவு அவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.
போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் நீலாங்கரை அருகே உள்ள அக்கரையில் ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் அவரை நீலாங்கரைக்கு அழைத்து சென்றனர். அப்போது சீசிங் ராஜா தன்னிடம் இருந்த கள்ளத்துப்பாக்கியால் போலீசாரை சுட முயன்றதாகவும், இதனால் போலீசார் தற்காப்பிற்காக என்கவுன்ட்டர் செய்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் சீசிங் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து அவரது உடலை சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி திருவேங்கடம், ஏற்கனவே என்கவுன்ட்டர் செய்யப்பட்ட நிலையில், ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டர் செய்யப்பட்டது தலைநகர் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எனது கணவருக்கு தொடர்பில்லை, அவரை போலி என்கவுன்ட்டர் செய்ய திட்டமிட்டுள்ளனர்” என்று சீசிங் ராஜா மனைவி நேற்று வீடியோ வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தலைமை நீதிபதிக்கு பதிவு தபால்கள் அனுப்பிய போக்குவரத்து ஓய்வூதியர்கள்!
டாப் 10 நியூஸ்: அனுர குமார திசாநாயக்க பதவியேற்பு முதல் ஐ.நா சபையில் மோடி உரை வரை!