ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் எப்படி கொண்டு வரப்பட்டது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 25 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் சுமார் 5 ஆயிரம் பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து புதிதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் இன்று (டிசம்பர் 11) விசாரணைக்கு வந்தன.
அப்போது, காவல்துறை அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.குமரேசன், “ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டு, கைமாற்றப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரத்தில் பல்வேறு சதிச் செயல்கள் நடந்துள்ளன.இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவர்கள் ஏற்கனவே தாக்கல் செய்த மனுக்களின் விசாரணை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த வழக்குகளோடு இந்த வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்றும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.குமரேசன் கோரிக்கை வைத்தார்.
மனுதாரர்கள் சார்பில், “இந்த மனு ஒவ்வொரு முறை விசாரணைக்கு வரும் போதும் இதே காரணத்தை கூறி விசாரணையை தாமதப்படுத்துகின்றனர்” என்று வாதிடப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், அனைத்து மனுக்கள் மீதும் பதில் மனுத்தாக்கல் செய்ய அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
மேலும், சென்னை உயர் நீதிமன்றத்திற்குள் வெடிகுண்டு கொண்டு வரப்பட்டது தொடர்பாக தனியாக விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசாருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்தியா கூட்டணி: தலைமையேற்கத் தகுதியானவர் யார்?
பெரியார் நினைவகம் திறப்பு : கேரளா சென்ற ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!