அரியலூர் மாவட்டம் செந்துறையில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டதால், அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா இன்று (ஏப்ரல் 12) உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறுத்தை சுற்றித்திரிந்து வந்தது. இதனை பிடிப்பதற்காக வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்,
இந்தநிலையில், அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதனையடுத்து அந்த பகுதியில் ஆய்வு செய்த வனத்துறையினர் செந்துறை அரசு மருத்துவமனை அருகே சிறுத்தை கால் தடத்தை உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, மருத்துவமனை அருகே இருந்த கம்பிவேலியை சிறுத்தை தாண்டி சென்றது தெளிவாக தெரிந்தது.
உடனடியாக செந்துறை மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் அறிவுறுத்தினர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அரியலூர் மாவட்ட வனத்துறை அலுவலர் இளங்கோவன், “மயிலாடுதுறையில் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு குழுவினர், அரியலூருக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறையில் சுற்றித்திரிந்த சிறுத்தை தான் அரியலூருக்கு வந்ததா என்பதை உறுதியாக சொல்ல முடியாது” என்று தெரிவித்தார்.
இந்தநிலையில், சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டதால், அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று மதியம் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவிட்டுள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சிவகங்கை: காங்கிரசுக்குள் எதிர்ப்பு, அதிமுகவின் வேகம்… கார்த்தியை கரையேற்றும் அமைச்சர்கள்!
இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம்: அண்ணாமலை மீது வழக்கு!