Are you going to work abroad? - Tamilnadu Government ​​Alert!

வெளிநாட்டு வேலை… தங்க முக்கோணத்தில் மாட்டிக்காதீங்க… -அரசு எச்சரிக்கை!

தமிழகம்

வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக தமிழக இளைஞர்களை அழைத்து சென்று சைபர் கிரைம் மோசடியில் ஈடுபடுத்துவதாக அயலகத் தமிழர் நலத்துறை இன்று (மே 26) எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுத்தொடர்பாக அயலகத் தமிழர் நலத்துறை ஆணையர் பா.கிருஷ்ணமூர்த்தி இன்று  வெளியிட்ட அறிக்கையில்,

“பல்வேறு வேலை வாய்ப்புகளுக்காக தமிழ்நாட்டு இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சமீபகாலமாக தகவல் தொழில்நுட்ப பணி என்ற பெயரில், கம்போடியா, தாய்லாந்து, மியான்மர் (பர்மா) ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு சென்றவுடன் சட்டவிரோதமான இணையதள நடவடிக்கைகளில் ஈடுபடும்படி அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

Are you going to work abroad? - Tamilnadu Government ​​Alert!

அம்மாதிரி சட்டவிரோதமான இணையதள பணிகளை செய்ய மறுக்கும் நபர்களை கடுமையாக துன்புறுத்துகிறார்கள். இதுவரை மேற்குறிப்பிட்ட நாடுகளில் இருந்து கடந்த வருடம் மட்டும் 83 தமிழர்களை அயலகத் தமிழர் நலத்துறை மீட்டு வந்துள்ளது.

அண்மைக் காலங்களில் தாய்லாந்து வழியாக லாவோஸ் நாட்டிற்கு தகவல் தொழில்நுட்ப பணி என்றும், டிஜிட்டல் சேவைகளை சந்தைபடுத்துகின்ற மேலாண்மை பணி என்றும், நமது இளைஞர்களை அழைத்துச் சென்று சட்டவிரோத செயல்களில் ஈடுபட கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

இம்மாதிரியாக இளைஞர்களை கவர்ந்து அழைத்து செல்லும் முகவர்கள் துபாய், தாய்லாந்து, சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றனர்.

இம்முகவர்கள் இளைஞர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பணிக்கென்று மிக எளிமையான நேர்காணல் வழியாகவும், எளிமையான தட்டச்சு தேர்வு வைத்து தெரிவு செய்வதோடு அதிக சம்பளம், தங்குமிட வசதி, நாடு திரும்புவதற்கான விமானப் பயணச் சீட்டு மற்றும் விசா ஏற்பாடு செய்யப்படும் என்று ஆசை வார்த்தைகளை சொல்லி இளைஞர்களை பணிக்கு தேர்வு செய்கின்றனர்.

தகவல் தொழில்நுட்ப பணி என்று நம்பி சென்ற இளைஞர்கள் சட்டவிரோதமாக தாய்லாந்து எல்லை வழியாக லாவோஸ் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, லாவோஸில் உள்ள Golden Triangle என்ற சிறப்பு பொருளாதார மண்டலத்தில் கடுமையான மற்றும் கட்டுப்பாடான நிலைமைகளின் கீழ் பணிபுரிய சிறைபிடிக்கப்படுகின்றனர்.

தாய்லாந்து அல்லது லாவோஸ் நாடுகளில் வருகைக்கான விசா (Arrival visa) வேலைவாய்ப்பை அனுமதிக்காது. மேலும், அத்தகைய விசாவில் லாவோஸுக்கு வருபவர்களுக்கு லாவோஸ் நாட்டு அதிகாரிகள் வேலைக்கான அனுமதியை (Work Permit) வழங்குவதில்லை.

சுற்றுலா விசா, சுற்றுலா நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. லாவோஸில் மனித கடத்தல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு 18 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

Are you going to work abroad? - Tamilnadu Government ​​Alert!

இதுபோன்ற மோசடி வலையில் நமது இளைஞர்கள் மாட்டிக்கொள்ளாமல் எச்சரிக்கை உணர்வுடன், ஆட்சேர்ப்பு முகவர் மற்றும் வேலை செய்யவிருக்கும் நிறுவனத்தை பற்றி நன்றாக விசாரித்து பணிக்கு செல்லவும் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் வேலைக்கான விசாவின் உண்மைதன்மை மற்றும் முறையான பணி ஒப்பந்தம் (Work Permit) குறித்து பயணிப்பதற்கு முன் பணிபுரிய செல்ல உள்ள நாட்டிலுள்ள இந்திய தூதரகம் அல்லது இந்தியாவிலுள்ள அந்நாட்டின் தூதரகம் மூலம் கட்டாயம் அறிந்து கொள்ளவேண்டும்.

லாவோஸ் மற்றும் கம்போடியாவில் வேலை வாய்ப்புகள் குறித்த விவரங்களை லாவோஸ் நாட்டிலுள்ள இந்திய தூதரகத்தின் தொலைபேசி எண் 856-2055536568, மின்னஞ்சல் cons.vientianne@mea.gov.in மற்றும் கம்போடியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் மின்னஞ்சல் cons.phnompehh@mea.gov.in., visa.phnompehh@mea.gov.in சரிபார்க்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அயலக வேலைவாய்ப்பு தொடர்பான விவரங்கள் மற்றும் அயல்நாடுகளில் உள்ள தமிழர்கள் சந்திக்கும் இன்னல்கள் குறித்து தீர்வு காண தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அ) 18003093793 (இந்தியாவிற்குள்)
ஆ) 8069009901 (அயல்நாடுகளிலிருந்து தொடர்புக்கு)
இ) 8069009900 (Missed Call No.)

மேலும் சென்னையில் உள்ள குடிப்பெயர்வு பாதுகாப்பு அலுவலரையும் (உதவி எண்- 90421 49222) தொடர்பு கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் ஒன்றிய அரசில் பதிவு பெறாமல் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் முகவர்கள் / முகமைகள் மீது காவல்துறை மூலம் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என அயலகத் தமிழர் நலத்துறை  ஆணையர் தெரிவித்துள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

IPL 2024 final: மொத்தப் பரிசுத்தொகை எவ்வளவு? முழுவிவரம் தெரிந்துகொள்வோமா?

டெல்லி: தனியார் மருத்துவமனையில் தீ விபத்து – 7 குழந்தைகள் பரிதாப பலி!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *