Are you afraid of marriage?

உங்களுக்கு திருமண பயமா?

சிறப்புக் கட்டுரை தமிழகம்

 

சத்குரு

கேள்வி: “இன்னும் சில வாரங்களில் எனக்கு திருமணம் நடக்கப்போகிறது. கணவராக வருபவர் எப்படி இருப்பாரோ, புதிய வாழ்க்கை எப்படி அமையுமோ என்ற அச்சம் என்னைப் பிடித்து ஆட்டுகிறது. திருமண நாள் நெருங்க நெருங்க கலக்கமாக இருக்கிறது. இந்த அச்சத்தைத் துரத்துவது எப்படி?”

பதில்

ஐந்து குரங்குகள் ஒரு கூண்டில் அடைக்கப்பட்டன. கூண்டின் கதவு பூட்டப்படவில்லை. இதைக் கவனித்து ஒரு குரங்கு தாழை திறக்க முயன்றபோது, மற்ற நான்கு குரங்குகளின் மீது வெந்நீர் வீசப்பட்டது.

அந்தக் குரங்குகள் பயந்தன. தாழ்ப்பாளில் கை வைத்ததால்தான் இப்படி ஆயிற்று என்று கருதி, வெளியேறப் பார்த்த குரங்கைத் தாக்கின. உள்ளே இழுத்துப் போட்டன.

பின்னர், உள்ளே இருந்த ஐந்து குரங்குகளில் ஒன்று வெளியே எடுக்கப்பட்டு, புதிய குரங்கு ஒன்று உள்ளே செலுத்தப்பட்டது. அந்தக் குரங்கு கதவுப் பக்கம் போனது. இப்போது, சுடுநீர் வீசப்படுவதற்கு முன்பாகவே மற்ற நான்கு குரங்குகளும் அதைத் தாக்கின.

இப்படி ஒவ்வொரு குரங்காக வெளியேற்றப்பட்டு, ஒரு கட்டத்தில் உள்ளே ஐந்து குரங்குகளும் மாற்றப்பட்டிருந்தன. அவற்றில் எதன் மீதும் கொதிநீர் வீசப்படவில்லை.

ஆனாலும், காரணம் புரியாமலேயே, எந்தக் குரங்கு கதவுப் பக்கம் போனாலும், அது தாக்கப்பட வேண்டும் என்பது அங்கே எழுதப்படாத சட்டமாகிவிட்டது.

இதே நிலைதான் மனித இனத்துக்கும் நேர்ந்திருக்கிறது.

ஆதி மனிதனுக்குத் தன் உயிர் குறித்து நேர்ந்த அச்சம், வழிவழியாக இன்று வரை தொடர்கிறது. அச்சம் இல்லை என்றால், பெரும்பாலானவர்கள் கடவுள்களை வணங்குவதையே நிறுத்திவிடுவார்கள். கோயில்களில் எத்தனை பேருடைய அச்சம் எண்ணெய் விளக்குகளாக எரிகிறது என்பதைப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும்.

இந்தப் பயம் எதனால் வந்தது? உங்கள் வசம் இருப்பதை யாரோ எடுத்துப் போய்விடுவார்கள் என்கிற பாதுகாப்பின்மைதான் அச்சமாக மாறியிருக்கிறது.

புதிதாக எதையாவது முயற்சி செய்யப்போய், இருப்பதையும் இழக்க நேரிடுமோ என்ற அச்சம் பலரை ஆட்டுவிக்கிறது. புதியவற்றைத் தவிர்ப்பதற்கே மனிதமனம் அதிகமாக விழைகிறது.

மாற்றங்களே இல்லாமல், அதே அனுபவங்களே நேர்ந்து கொண்டு இருந்தால், வாழ்க்கையே மந்தமாகிவிடும்.

சங்கரன்பிள்ளையின் மகன் தன் சிறுவயதில் பெற்றோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.

“இந்த போட்டோவில் உன் பக்கத்தில் நிற்பது யார் அம்மா?”

“உன் அப்பாடா!”

மகன் அம்மாவை ஆச்சர்யமாக நிமிர்ந்து பார்த்தான். “நன்றாக கருகருவென்ற முடியுடன், ஸ்மார்ட்டாகத் தெரிகிறாரே! அவரை விட்டுவிட்டு, தொப்பையும் வழுக்கையுமாக இருக்கும் இந்த ஆளுடன் ஏன் அம்மா வாழ்கிறோம்?” என்றான்.

மாற்றங்கள்தாம் வாழ்க்கையின் சுவாரஸ்யம்! மாற்றங்களைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை.

உங்கள் பயத்தை வலிந்து துரத்த முடியாது. நீங்கள் வாளெடுத்து வீரராகிவிட்டால், அச்சம் காணாமல் போய்விடுமா? அப்படியும் சொல்ல முடியாது. எதற்காக உங்கள் வீரத்தை நிலைநாட்டப் பார்க்கிறீர்கள்? எதிரி என்று ஒருவனைக் கருதியதுமே, அவனைப் பற்றிய அச்சம் பிறந்துவிடுகிறது. அந்த அச்சத்தினால், வீரத்தை வெளிப்படுத்திக் காட்சிக்கு வைக்க வேண்டி இருக்கிறது.

அச்சம் மாறுவேடம் போட்டு ஆயுதம் ஏந்தினால், அதை வீரம் என்று நினைத்து விடுவதா?

திருமணம் முடிந்ததும், அடுத்தவரை ஆளும் வாய்ப்பு கிடைக்குமா, அல்லது ஆளப்படும் பரிதாபம் நேருமா என்ற அச்சம் உங்களை செலுத்துகிறது.

இரண்டு உயிர்கள் ஒன்றை ஒன்று புரிந்து கொண்டு, வாழ்க்கையை ஆனந்தமாக்கிக் கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பு அல்லவா திருமணம்? எதிர்பார்ப்பில்லாத அன்பைப் பகிர்ந்து கொள்வதை விடுத்து, ஆதாயங்களை மட்டுமே தேடத் துவங்கும்போதுதான் அது கசப்பாகிப் போகிறது. அங்கே அன்பு மட்டும் தீவிரமாக மலர்ந்திருந்தால், வாழ்க்கையின் மேடு பள்ளங்களில் விழுந்து எழுந்தாலும் பயணம் சுகமாக அமைந்துவிடும்.

இதைப் புரிந்து கொள்ளாமல், உங்கள் பாதுகாப்பைப் பற்றியே கவலை கொண்டு இருப்பதால்தான் அச்சம் என்பது அடிப்படை உணர்வாகிவிட்டது. உங்களுடைய மற்ற உணர்வுகள் எல்லாமே அதிலிருந்து வேர் பிடித்து எழுந்தவை ஆகிவிட்டன.

உங்கள் அச்சத்தைக் களைவது எப்படி? நீங்களே ஒரு டைனோசரை உருவாக்கிவிட்டு, அதிலிருந்து தப்பித்து ஓடுவது எப்படி என்று யோசிப்பவரைப் போன்ற நிலையில் இருக்கிறீர்கள்.

அச்சம் இயல்பானதல்ல. அதை உருவாக்குவதே நீங்கள்தான். அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். அச்சத்தைத் துரத்த வேண்டும் என்று முனையாதீர்கள். அச்சத்தை உருவாக்காமலேயே இருப்பது எப்படி என்று பாருங்கள்.

மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்….

ஜெயிலர் இசை வெளியீட்டு விழா: அப்டேட் கொடுத்த படக்குழு!

அதிரடியாய் குறைந்த தங்கம் விலை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *