இன்று பல கடைகளிலும் 750 மில்லி ஜூஸ் டிரெண்டாகி வருகிறது. பெரிய டம்ளரில் வழிய வழிய ஜூஸ், மில்க் ஷேக், ரோஸ் மில்க்கை குறைந்த விலைக்குத் தருகிறார்கள். அடிக்கடி இந்த 750 மில்லி ஜூஸ் குடிப்பது ஆரோக்கியமானதா?
“750 மில்லி ஜூஸ், மில்க் ஷேக் போன்றவற்றை அடிக்கடி எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்துக்கு நிச்சயம் உகந்ததல்ல” என்று கூறும் டயட்டீஷியன்கள், “இவற்றில் கலோரிகள் மிக அதிகமாக இருக்கும். இத்தகைய ஜூஸ் மற்றும் மில்க் ஷேக்குகளில் அவர்கள் சேர்க்கும் சர்க்கரையின் அளவு நமக்குத் தெரியாது. அதிகப்படியாகச் சேர்க்கப்படும் சர்க்கரையின் விளைவால் இதைக் குடித்த அடுத்த சில மணி நேரத்திலேயே உங்களுக்குப் பசியெடுக்கும்.
பொதுவாகவே அரைத்து, வடிகட்டப்படும் ஜூஸ்களில் நார்ச்சத்தும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டும் இருக்காது. இதே ஜூஸ் மற்றும் மில்க் ஷேக்குகளை பேக் செய்தும் சில இடங்களில் விற்கிறார்கள். பேக்கிங்கின் லேபிளின் மீது குறிப்பிடப்பட்டிருக்கும் சர்க்கரையின் அளவை கவனியுங்கள். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் சர்க்கரை அளவானது ஒரு மில்லிக்கா, 100 மில்லிக்கா என்று பாருங்கள். ஒரு டீஸ்பூன் என்பது 5 கிராம். 100 மில்லி ஜூஸில் நிச்சயம் 5 கிராமுக்கு அதிகமான சர்க்கரையே சேர்க்கப்பட்டிருக்கும். அப்படியானால் 750 மில்லி யில் எவ்வளவு சர்க்கரை இருக்கும் என யோசியுங்கள்.
தவிர அடிக்கடி இவற்றைக் குடிப்பதால் பற்களில் சொத்தை, உடல் பருமன், நீரிழிவு, கொலஸ்ட்ரால் போன்ற பாதிப்புகள் வரலாம். எனவே, பொதுவாகவே ஜூஸாக குடிப்பதைத் தவிர்ப்பதே சிறந்தது. அளவுக்கதிகமாகக் குடிப்பதை அறவே தவிர்ப்பதுதான் மிகவும் நல்லது.
எப்போதுமே பழங்களை அப்படியே கடித்துச் சாப்பிடுவதுதான் ஆரோக்கியமானது. அதுதான் செரிமானத்தை சீராக்கும், மலச்சிக்கல் வராமல் தடுக்கும். வைட்டமின்களையும் தாதுச்சத்துகளையும் அப்படியே உடலுக்குக் கொடுக்கும்” என்கிறார்கள்.
கிச்சன் கீர்த்தனா: ஜவ்வரிசி – புளி உப்புமா கொழுக்கட்டை