சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் தங்களை கடவுளை விட மேலானவர்கள் என நினைத்துக்கொள்ள கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் தொடந்து சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். அண்மையில், தீட்சிதர்கள் கோயிலுக்குள் கிரிக்கெட் விளையாடியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கிடையே கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த அரசு செவிலியரை தாக்கியதாகவும், முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், கனக சபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய உதவியதாகவும் கூறி, நடராஜ தீட்சிதரை பொது தீட்சிதர்கள் குழு சஸ்பெண்ட் செய்தது
இதனை எதிர்த்து நடராஜ தீட்சிதர் இந்து அறநிலையத்துறை இணை ஆணையரிடம் மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த கடலூர் இணை ஆணையர், நடராஜ தீட்சிதர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்தார்.
இதை எதிர்த்து பொது தீட்சிதர்கள் குழு செயலாளர் வெங்கடேச தீட்சிதர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
பொது தீட்சிதர் குழுவின் முடிவில், தலையிட இந்து அறநிலைத்துறைக்கு அதிகாரம் இல்லை என்று கூறி தாக்கல் செய்த அந்த மனுவில், இணை ஆணையரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு இன்று (அக்டோபர் 19) விசாரணை வந்தது.
அப்போது நடராஜ தீட்சிதர் சார்பில், “உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் கோயில் தங்களுக்கு சொந்தமானது என பொது தீட்சிதர்கள் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். நீதிமன்றம் தான் இதை கட்டுப்படுத்த வேண்டும்” என்று வாதிடப்பட்டது.
இதை கேட்ட நீதிபதி, “மன கஷ்டங்களுக்காக கோயிலுக்கு வரும் பக்தர்கள் அங்கும் அவமானப்படுத்தப்படுகிறார்கள்” என்று வேதனை தெரிவித்தார்.
மேலும் அவர், “தீட்சிதர்கள் ஆணவத்துடன் செயல்படுகின்றனர். இது நல்லதல்ல. சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வருபவர்கள் எல்லாம் சண்டைக்கு வருவது போலவே தீட்சிதர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் தங்களை கடவுளுக்கு மேலானவர்கள் என கருதுகிறார்கள்” என சுட்டிக்காட்டினார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த ஆரூத்ரா தரிசனம் தற்போது பல கோயில்களிலும் நடத்தப்படுகிறது என்று குறிப்பிட்ட நீதிபதி தண்டபாணி, “சிதம்பரம் கோயில் ஆரூத்ரா தரிசனத்திற்கு முன்பு போல பக்தர்கள் கூட்டம் வருவதில்லை. இப்படியே நடந்துகொண்டால் பக்தர்களுடைய வருகை குறைந்து கோயில் பாழாகி விடும்” என்றார்.
கோயிலில் காசு போட்டால்தான் பூ கிடைக்கும். இல்லையென்றால் விபூதி கூட கிடைக்காது என்று நகைச்சுவையாக குறிப்பிட்ட நீதிபதி தண்டபாணி, இந்த வழக்கில் பதிலளிக்குமாறு அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
நெல்லை: நீட் கோச்சிங் சென்டரில் மாணவர்களுக்கு அடி, உதை… சமூக நலத்துறை விசாரணை!
எப்போ பார்த்தாலும் நம்மகிட்டயே ஒரண்டை இழுக்குறாங்க… குண்டு துளைக்காத கார் வாங்கிய சல்மான்