அர்ச்சகர் நியமனம்: மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!
அர்ச்சகர் நியமனம் தொடர்பான தமிழக அரசின் அரசாணைக்கு உச்சநீதிமன்றம் இன்று (நவம்பர் 8) தடை விதிக்க மறுத்துள்ளது. தமிழ்நாட்டில் ஆகம விதிகளுக்கு முரணாக கோவில்களில் அர்ச்சகர்களை நியமிக்க தடை விதிக்ககோரி ஆதி சைவ சிவாச்சாரியர்கள் நலச்சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதிகள் போபண்ணா, சுந்தரேஷ் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. archakas case supreme court
தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தபே ஆஜராகி,
“ஆகம விதிகளை பின்பற்றாத அனைத்து கோவில்களுக்கும் அர்ச்சகர்கள் நியமனம் செய்வதை தடுக்க கூடாது. ஆகம விதிகளை படித்து பயிற்சி பெற்றவர்கள் தான் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
அவர்களுக்கு அரசு சார்பில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. கோவில்களை ஒரு பிரிவினர் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது எவ்வாறு சரியாக இருக்கும். கோவில் என்பது அனைவருக்கும் பொதுவானது” என்று வாதிட்டார்.
மனுதாரர் தரப்பில், “தமிழ்நாட்டில் கோவில்களை அரசாங்கம் கைப்பற்றி வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளதை கருத்தில் கொள்ள வேண்டும். கோவில்களில் நிர்வாக குழு நியமனங்களுக்காக நடைபெறும் தேர்தல் விதிகளுக்கு முரணானது” என்று தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், “கோவில்கள் ஆக்கிரமிக்கப்படுவதாக பிரதமர் கூறினால் அவரிடமே சென்று முறையிடலாம். நிர்வாக குழு நியமனங்களுக்கான தேர்தல் விவகாரங்களை ஏன் பிரச்சனையாக மாற்றுகிறீர்கள்?
ஏற்கனவே நிர்வாக குழுவின் காலம் முடிந்துவிட்டால் அடுத்தவர்களுக்கு வழிவிட வேண்டும். நிர்வாக குழு தேர்தல் நடைமுறைகளை கண்காணிக்க சட்ட அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற மனுதாரர் தரப்பின் கோரிக்கையை நிராகரிக்கிறோம். மாநில அரசே அந்த நடைமுறையை செய்து முடிக்கும். ஆகம விதிகள் பின்பற்றப்படும் கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனம் மீதான உயர்நீதிமன்ற தடை தொடரும். வழக்கின் விசாரணை ஜனவரி 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என்று தெரிவித்தனர். archakas case supreme court
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
சீமான் பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!
கோவை பிரபல கல்லூரியில் நடந்த கொடூர ராகிங்… 7 மாணவர்கள் சஸ்பெண்ட்!
’எனர்கா கேமரிமேஜ்’ விழாவில் ஜூரியாகும் முதல் இந்தியர் ரவி கே.சந்திரன்
தீபாவளி விடுமுறை… மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!