அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் அர்ச்சகர் நியமனத்திற்கான விண்ணப்பங்கள் வெளியானது. இதனை எதிர்த்து அந்த கோவிலில் பணிபுரிந்த சுப்பிரமணிய குருக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் “யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகலாம். குறிப்பிட்ட ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் அவர்கள் தேர்சி பெற்றிருக்க வேண்டும். இதில் சாதிக்கு எந்த பங்குமில்லை. அந்தந்த கோவில்களில் சொத்து பதிவேட்டில் கூறப்பட்டுள்ள ஆகமத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்” என்று தீர்ப்பு வழங்கியிருந்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சுப்பிரமணிய குருக்கள் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் “ஆகம கோவில்களில் அர்ச்சகர்களை பரம்பரை அடிப்படையில் நியமிக்க வேண்டும். தனி நீதிபதியின் உத்தரவு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. அதனால் தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
தமிழக அரசு தரப்பில், “ஆகம கோவில்கள் மற்றும் ஆகமம் பின்பற்றாத கோவில்கள் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழுவுக்கு எதிராக மனுதாரர்கள் வழக்கு தொடர்ந்து தடை உத்தரவு வாங்கியுள்ளனர். இதன்காரணமாக தமிழகத்தில் 2405 அர்ச்சகர் பணியிடங்கள் காலியாக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அர்ச்சகர்கள் நியமனத்தில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை செப்டம்பர் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
செல்வம்