அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்: உயர்நீதிமன்ற தீர்ப்பின் முழு பின்னணி!

Published On:

| By christopher

சொத்து பதிவேட்டில் குறிப்பிட்டுள்ள ஆகம விதிகளில் தேர்ச்சி பெற்றவர்களையும் கோவில் நிர்வாக அதிகாரிகளே அர்ச்சகராக நியமிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜூன் 26) தீர்ப்பு வழங்கியுள்ளது. 

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியதை தொடர்ந்து பல்வேறு சிக்கல்கள் நீடித்து வருகிறது.

archagas appointment : chennai high court verdict

கோவில் காலிப் பணியிடங்களில் இந்துசமய அறநிலையத்துறை மூலம் அர்ச்சகர் நியமனம் நடைபெற்று வருகிறது. ஆனால் அரசு நியமிக்கும் அர்ச்சகர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக வழக்கு தொடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2018 ஆம் ஆண்டு சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் அர்ச்சகர் நியமனத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்று கோயில் நிர்வாக அதிகாரி விளம்பரம் வெளியிட்டார்.

இதை எதிர்த்து கோயில் அர்ச்சகர் சுப்ரமணிய குருக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ”

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ”அர்ச்சகர்கள் நியமனத்தில் கோவில்களின் ஆகமத்தை கண்டறிய அமைக்கப்பட்ட குழு அறிக்கை அளிக்கும் வரை காத்திருக்க வேண்டியது அவசியம் இல்லை என்றும்,

சொத்து பதிவேட்டில் குறிப்பிட்ட ஆகமம் மற்றும் பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றவர்களை அர்ச்சகர்களாக கோவில் நிர்வாக அதிகாரிகள் நியமிக்க முடியும்” என்று தீர்ப்பளித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் அரசு சார்பில் ஆஜரான  சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன் பேட்டி அளித்துள்ளார்.

முதல் வாதம் : பாரம்பரிய வழக்கம்

அவர் கூறுகையில், “கடந்த 2018ஆம் ஆண்டு சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் அர்ச்சகர் நியமனத்திற்கு விண்ணப்பிக்க வேண்டி கோயில் நிர்வாக அதிகாரி அறிவிப்பு வெளியிட்டார்.

அதற்கு எதிராக கோயில் அர்ச்சகர் சுப்ரமணிய குருக்கள்  சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ”இந்த கோவிலில் 1946ஆம் ஆண்டில் இருந்து பாரம்பரிய வழக்கப்படியே அர்ச்சகரை நியமிக்க வேண்டும் என்று விதி உள்ளது. அதனை பின்பற்றாவிட்டால் ஆகம விதிகளை மீறுவதாக அர்த்தம். எனவே கோவில் நிர்வாக அதிகாரியின் அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்” என்று கோரினார்.

இதற்கிடையே கடந்த 2020 ஆம் ஆண்டு அமல்படுத்திய சட்டத்தில், கோவில்களில் பின்பற்றப்படும் ஆகமங்களுக்கு பூஜை முறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 1964ஆம் ஆண்டு அறநிலையத்துறை சட்டத்தில் கோவில் குருக்களிடம் பிட்னஸ் சர்டிபிகேட் வாங்கினால் அவர் அர்ச்சகராகலாம் என்ற விதி உள்ளது

இதனை எதிர்த்து 1972ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கில், பாரம்பரிய விதிப்படி அர்ச்சகர் நியமனம் செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதனை சுட்டிக்காட்டி வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்று வாதம் முன்வைக்கப்பட்டது.

இரண்டாம் வாதம்: கோவில் நிர்வாக அதிகாரிக்கு உரிமையில்லை

இரண்டாவதாக, அரச்சர்கர் நியமனம் குறித்து அறங்காவலர் மட்டுமே விளம்பரம் செய்ய முடியும் என்றும், அறநிலையத்துறை நியமனம் செய்த கோவில் நிர்வாக அதிகாரி செய்ய முடியாது என்றும் குருக்கள் தரப்பு வாதிட்டது.

அதற்கு அரசு தரப்பில், 2020ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தில், அர்ச்சகர்களை நியமிக்கும் அதிகாரம் அறங்காவலர் மட்டுமின்றி கோவில் பிட் பர்சன் மற்றும் கோவில் நிர்வாக அதிகாரிக்கும் உரிமையுள்ளது என்ற விதி கொண்டுவரப்பட்டுள்ளது என்று வாதிட்டோம்.

அதை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், கோவில் பிட் பர்சன் மற்றும் கோவில் நிர்வாக அதிகாரி அர்ச்சகரை நியமிக்கலாம் என்று தீர்ப்பளித்தது.

மூன்றாம் வாதம்: சொத்து பதிவேடு

மூன்றாவதாக, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் சட்டத்திற்கு எதிரான ஒரு வழக்கில், “ஓய்வு பெற்ற நீதிபதியின் கீழ் ஒரு கமிட்டி அமைக்கப்பட வேண்டும். இந்த கமிட்டி ஆகம கோவில்கள் எது? ஆகமம் சாராத கோவில்கள்  என்ற ஆய்வு பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை சுட்டிக்காட்டிய குருக்கள் தரப்பு. இந்த கமிட்டி இன்னும் சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் ஆய்வு செய்யவில்லை என்றும், ஆய்வு முடிவு வெளிவரும் வரை அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பாக கருத்து தெரிவிக்க கூடாது என்று தெரிவித்தனர்.

அதற்கு அரசு தரப்பில் வைக்கப்பட்ட எதிர்வாதத்தில், சுகவனேஸ்வரர் கோவில் சொத்து பதிவேட்டில் காரண ஆகமம் பின்பற்றப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்று எங்கெல்லாம் சொத்து பதிவேட்டில் என்ன ஆகமம் என்று கூறப்பட்டுள்ளதோ, அதன் அடிப்படையில் அந்த கோவில்களில் எல்லாம் கமிட்டியின் ஆய்வு முடிவு வரும் வரை காத்திருக்காமல் அர்ச்சர்களை நியமிக்கலாம்” என்று வாதிட்டோம்.

இதனையும் ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், சொத்து பதிவேட்டில் உள்ள ஆகமத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் எந்த சாதியை சார்ந்தவர்களாய் இருந்தாலும், அவர்களை அர்ச்சகராக நியமனம் செய்யலாம் என்று தீர்ப்பளித்துள்து என்று வழக்கறிஞர் அருண் நடராஜன் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

விஜய்க்கு எதிராக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்!

NFC 2023: 2வது முறையாக இறுதிப்போட்டியில் நுழைந்த தமிழ்நாடு மகளிர் அணி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share