பற்களை பிடுங்கிய விவகாரம்: பல்வீர் சிங் மீது குற்றப்பத்திரிக்கை எப்போது?

Published On:

| By Monisha

arappor iyakkam send pettition for charge sheet on balveer singh

அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி சித்திரவதை செய்த வழக்கில் விரைவாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிட வேண்டும் என்று அறப்போர் இயக்கம் மனு அளித்துள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணை கைதிகளின் பற்களை கருங்கற்களால் உடைத்தும், கட்டிங் ப்ளேயரை கொண்டு பிடுங்கியதாகவும் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன.

இதனால் பல்வீர் சிங் மீது எஃப்.ஐ.ஆர் போடப்பட்டது. பின்னர் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை முடிந்தும் இன்னும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

இந்த வழக்கில் விரைவாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமுதா ஐஏஎஸ், டி.ஜி.பி சங்கர் ஜிவால் ஆகியோருக்கு அறப்போர் இயக்கம் மனு அனுப்பியுள்ளது.

இது குறித்து அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி யாக பணியாற்றிய பல்வீர் சிங் மற்றும் இதர காவலர்கள், பலரது பற்களை பிடுங்கி சித்திரவதை செய்தது மார்ச் மாதம் வெளிவந்தது.

ஏப்ரல் மாதம் இந்த விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. 4 எஃப்.ஐ.ஆர்கள் வரை போடப்பட்டது.

ஆனால் 5 மாதங்கள் ஆகியும் இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. பல்வீர் சிங் கைதும் செய்யப்படவில்லை.

சிபிசிஐடி விசாரணை முடித்து விட்டதாகவும் தமிழ்நாடு அரசு உள்துறை, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அனுமதி அளிப்பதில் தாமதம் இருப்பதாக கேள்விப்பட்டு தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அதன் நிலையைக் கேட்டோம்.

ஆனால் அது ரகசியம் என்று கூறி வழக்கின் நிலை குறித்து தகவல் தர முடியாது என்று அரசு பதில் அளித்து உள்ளது.

இது போன்ற அப்பட்டமான வழக்கில் கூட அரசு வெளிப்படைத்தன்மையை கடைபிடிக்க விரும்பவில்லை. மேலும் சில ஐபிஎஸ் லாபியின் அழுத்தமும் அரசுக்கு இருப்பதாக கேள்விப்படுகிறோம்.

எனவே அரசு உடனடியாக பல்வீர் சிங் மற்றும் மற்றவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய இனியும் தாமதிக்காமல் உடனே சிபிசிஐடிக்கு அனுமதி தரும் படி கோரி இன்று (செப்டம்பர் 7) மனு அனுப்பி உள்ளோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மோனிஷா

நெருங்கும் மழைக்காலம்… அதிகரிக்கும் கொரோனா: WHO எச்சரிக்கை!

விநாயகர் சதுர்த்தி: ரேஷன் கடைகள் செயல்படுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.